விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய தலைப்பு ஒரு நாள் காணாமல் போகும் நிலை தெரிகிறது.

 

விதை சேமிப்பது என்ற தலைப்பில் நாம் பாரம்பரிய விதைகள் மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளலாம். பாரம்பரிய விதைகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. கிடைக்கும் விதைகளை சரியான முறையில் பெருக்கம் செய்பவர்கள் மிக குறைவானவர்களே.

 

அதையும் தாண்டி விதைகள் இருப்பின் சில கூட்டம் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதாக சொல்லிக்கொண்டு விதைகள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி சென்று வெளி நாட்டிற்கு விற்கும் நிலை உருவாகி விட்டது.

 

உதாரணமாக மாப்பிள்ளை சம்பா மற்றும் சிவப்பு கவுனி இரண்டும் ஏறத்தாழ ஒரு நிறமாகவும் ஒரு வயதுடையதாகவும் இருந்தாலும் அதன் மறுத்துவகுணங்கள் வேறுபடும். அப்படி இருக்க இந்த இயற்கை கூட்டம் இவ்விரண்டையும் சேர்த்து ஒரு புதிய ரகத்தை விட்டு இவ்விரண்டையும் அழித்துவிட நீண்ட காலம் பிடிக்க போவதில்லை. காரணம்…… விவசாயி தமது விதையை நீண்டகாலம் சேமிக்க தேவையான வசதிகளை இல்லாததும், சோம்பேறித்தனமுமே காரணம்.

 

அதனால் விதைகளை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பாதுகாகிறோம், தாங்கள் தேவைப்படும் போது தங்களுக்கு விதைகள் கொடுக்கிறோம் என்று ஒரு கூட்டம் இயற்கை விவசாயம் மீது மிகுந்த மோகம் கொண்ட படித்த இளைய தலைமுறையை தங்கள் வசம் ஈர்த்து அவர்களை பகடைகாயாக பயன்படுத்தி காய் நகர்த்தி வெற்றி பாதையில் செல்வதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம்.

 

இவர்கள் 10 வருடம் கழித்து விதையை திரும்ப கேட்டாலும் கொடுப்பார்கள். ஆனால் எந்த விதை என்பதுதான் நாம் வைக்கும் கேள்வி. இன்னும் இதில் நிறைய பேசிக்கொண்டே போகலாம்.

 

ஏன் அவர்கள் இளைய தலைமுறையை குறிவைத்து செல்கிறார்கள் என்றால் நம் முன்னோர்கள் குதிர் போன்ற அமைப்பு மூலம் விதைகளை பாதுகாத்து விவசாயம் செய்ததை இவர்கள் கேவலமாக பார்த்திட்டு என்ன சொல்கிறார்கள் என்றால், இது என்னடா பைத்தியகாரத்தனம்.?

 

விதை சேமிக்க இவ்வளவு நேரத்தை செலவிடுகிறார்கள்.?
என்னைப்பார் நான் படித்த புத்திசாலி. ஒரு பைசா செலவில்லாமல் விதையை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து வருகிறேன் என்று மார்தட்டிக்கொள்ளும் இளைஞர்கள் பெருகி விட்டார்கள். அதனால் அந்த கூட்டத்திற்கு வேலை சுலபமாக முடிந்துவிட்டது. நம்ம ஆட்கள் மீடியாவில் பேட்டிக்கொடுத்து அதை பெருமையாக நினைத்து மிதப்பில் இருப்பதை அவர்கள் சாதகமாக்கி நம்மை புத்தகத்திலும் டிவி யிலும் படம் இட்டு நம்மை இந்த போதைக்கு அடிமையாக்கி நம் எதிர்காலத்தை விரைவில் அழிக்கும் காலம் வெகு தூரம் இல்லை என்ற ஐயம் உள்ளது. இதில் நாம் ஐய்யப்படும் அளவிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால் மகிழ்ச்சி.

 

  • மண்பாண்டங்களும் வைகோல் ஆகியவை வெப்பத்தினை சீராக வைத்து இருக்க உதவும். வெப்பம் சீராக இருக்கும் பட்சத்தில் விதைகள் நாள்பட நல்ல முளைப்பு திறனுடன் இருக்கும்.
  • அடுப்பு சாம்பலில் நீரை கலந்து அதனுடன் காய்கறி விதைகளை புரட்டி எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து பத்திர படுத்தினால் விதைகளின் முளைப்புதிறன் குன்றாமல் இருக்கும்
  • பசுஞ்சாணத்தில் விதைகளை பிணைந்து வரட்டி தட்டி எடுத்து வைத்தால் விதைகள் உலுத்து போகாமல் நீண்ட நாட்கள் பாது காக்கலாம்.

 

அசோக்குமார் கார்கூடல்பட்டி.


விவசாயத்தில் நிரந்திர வருமானத்திற்கு வழிகள் இல்லை. நமது தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யும். நிரந்திர வருமான வழி இருந்தால் ஒரு விவசாயி தன் மகனை விவசாயத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லமாட்டார். இதனால்தான் பலர் தங்களது வாரிசுகளை படிக்க வைத்து வெளியில் வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையோடு உள்ளார்கள். விவசாயம் செய்யும் வாரிசுகள் சம்பாதித்துவிட்டு வந்தவர்கள் அல்லது படிப்பு சற்று குறைவால் வந்தவர்கள் வேறு வழி இல்லாமல் சிலர் ஆர்வ மிகுதியால் விவசாயம் செய்பவர்கள். சிலர் தனியார் வேலை நிரந்தரம் அல்ல. விவசாயத்தால் நம் வயிற்றுக்காவது சம்பாதிக்கலாம் என்று இரண்டையும் சேர்த்து பார்க்கிறார்கள். இதுதான் நிலை. ஆடு, மாடு விவசாயம் இவற்றில் நிரந்திர வருமானத்தை எதிர்பார்க்கவே முடியாது. பல இடர்பாடுகளை உள்ளடக்கியது. வருமானம் அவ்வப்போதுதான் வரும்.

செல்வராஜ் காவேரிப்பட்டி


கமிட்டியில் போடும் நெல் விலை: (உதா) ₹1200 / ஒருமூட்டை 76 கிலோ, 1கிலோ நெல் விலை: ₹15.00

விதை நெல் விலை: (குறைந்தபட்ச விலை) ( உதா) ₹1500 / 30 கிலோ சிப்பம், 1 கிலோ விதை நெல் விலை: ₹ 50.00.

நாம் விதை நெல் எடுத்து வைத்தால், சேமிப்பு 5 ஏக்கர் விதைக்கும்போது, 8 கிலோ / ஏக்கர்: 5*8*(40-15) = ரூ 1000

இதே உளுந்து & நிலக்கடலை விதை என்றால் சேமிப்பு பல மடங்காகும். கணக்கு சரியா?

இந்த கணக்குகளை போட்டு விவசாயம் செய்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் விவசாயத்தின் செலவுகளை குறைப்பதோடு, கார்பரேட் விதை கம்பனிகளிடம் அடிமையாவதை தவிர்க்கலாம்.

நமது பாரம்பரிய விதைகளை காப்பாற்றலாம்.

மார்க்க பந்துலு சென்னை


வணக்கம்.

காலத்திற்கேற்ற அவசியத் தலைப்பு

 

விதை சேமிப்பு –

நல் உணவுப்பொருள் நம் கையிருப்பு –
கையேந்தும் நிலை தவிர்ப்பு –
தன்மானக் காப்பு. தற்சார்பு.

 

விதை சேமிப்பில் பின்பற்ற வேண்டியஅடிப்படை:

  • புதிய கோணிப்பைகள்
  • சாணக்கரைசலில் நன்கு நனைத்து நன்கு உலர்த்தி தானிய சேமிப்புக்கு
  • மண், களிமண் பானைகள்
  • சேமிக்கும் இடத் தூய்மை
  • விதைத்தானியங்களில் உடைப்போ குப்பையோ இல்லாது தேர்வு செய்தல்.
  • சேமிப்பு அறைகளை வேப்பிலை வேப்பெண்ணெய் கொண்டு மொழுகலாம்.
  • குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை நொச்சி, வேப்பிலை, சிறிது சாம்பிராணி புகை போடுதல்.
  • இயற்கை பூச்சிவிரட்டித் தழைகளை தானியப் பைகளை சுற்றி இடலாம்.
  • குறிப்பாக சேமிக்கப்படும் தானியங்களின்விதைகளின் ஈரப்பதம் மிகாமலும், குறையாமலும், பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

விதை சேமிப்பில் பாரம்பரிய முறைகள்.

  • சூரிய ஒளியில் காயவைத்தல்
  • சாம்பல் கொண்டு ( கால் பங்கு) பருப்பு விதைகள் பாதுகாக்கலாம்.இது விதையின் ஈரப்பதத்தை அளவாக வைக்க உதவும்.
  • செம்மண் குழைத்துப்பூசி நிழலில் உலர்த்தி கோணிப்பையில் நன்கு காற்றுப்புகாமல் கட்டி இருட்டறையில் வைத்தல்.
  • பருப்பு வகைகள்.
  • செம்மண் பூச்சு .
  • செம்மண் ஒரு உறைபோல் செயல்பட்டு பூச்சிகள் முட்டை வைக்காது காக்கிறது. முளைப்புத்திறனையும் அதிகரிக்கிறது.
  • மூங்கில் கூடைகளை களிமண்,பசுஞ்சாணம் கொண்டு மெழுகி பருப்பு விதைகளைப் பாதுகாத்தல்.
  • கல்உப்பு பூசியும் பதப்படுத்தி பருப்பு விதைகள் சேமிக்கப்படும்வழக்கமும் இருந்ததாகத் தெரிகிறது.
  • விதைகளுடன் பூண்டுப் பற்கள், இயற்கை பூச்சிவிரட்டித்தழைகள், மிளகாய், வசம்பு, மிளகு, ஆமணக்குத் தூள், ஒரு கிலோ விதைக்கு 10 – 15 கிராம் அளவு சுண்ணாம்பு,சுத்தமான மணல் – விதை – மணல் விதை, சுக்குப்பொடி/ இஞ்சிப்பொடி கிருமிநாசினியாக சீத்தாப்பழ விதைப்பொடி, துளசி இலை / விதை, போன்றவை கொண்டு விதைகள் பாதுகாக்கப்பட்ட விவரங்களை மூத்த உழவர்கள் தம் பேச்சில் நினைவுகூர்ந்திருக்கின்றனர்.

பழமையான விதைக்கலன்கள் – சாமிக்குக் கோட்டை விடுதல், பத்தாயம், குதிர், கோட்டை கட்டுதல், தொம்பை, மண்கோட்டை, குளுக்கை, சோளக்குழி, உயரமான நிலப்பகுதி (பழமையான அம்மன் கோயில்கள்) கோவில் கோபுர கலசங்கள். ஆகிய வழிமுறைகளில் நமது முன்னோர்கள் வழி வழியாக, காலம் காலமாக விதைகளை சேமித்து வந்துள்ளார்கள்.

திருமதி எழில் போரூர்


Comments

Popular posts from this blog

மண் மற்றும் நீர் பரிசோதனை