விவசாயம் சார்ந்த சுற்றுலா
சுற்றுலா நாம் அறிவோம். விவசாயம் சார்ந்த சுற்றுலா என்றால்? இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது சூழ்நிலையைப் பற்றிய புரிதல் நம் மனதுக்கு சிறிது வேண்டும். அதற்காகவே கீழே சில பத்திகள் தரப்பட்டுள்ளன. மனிதர்கள் மனிதர்களாக இருக்க மறந்ததால், பேராசை அவர்கள் கண்களை மறைத்ததால், மண்ணையும் இயற்கையையும் விட்டு விலகி, பணம் சம்பாதிக்க வேண்டும், ஆடம்பர வாழ்வு வாழ வேண்டும், மற்றவரைப் போன்ற வசதிகளைப் பெற வேண்டும் என்று ஓடத் தொடங்கினார்கள். ஓட்டம், ஓட்டம், ஓட்டம்… வெகு தூரம் ஓடிய பின்னும் தேடிய அனைத்தும் கிட்டிய பின்னும் இன்னமும் அவர்களது ஆசை அடங்கவில்லை. சோறு போடும் விவசாய நிலங்களை அழித்தாவது வீடு கட்ட வேண்டும், காற்றில் மாசு ஏற்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளைக் கட்டி வெறித்தனமான உற்பத்தி முறையை பின்பற்ற வேண்டும், நீராதாரங்களைப் பாழாக்கி மக்கள் நோயில் வீழ்ந்தாலும் பணம் கொடுக்கும் எதையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணங்களால், இன்றைய விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயத்திலும் கூட பணம் கொடுக்கும் பயிர்களை மட்டுமே வளர்க்க முற்படுகிறோம். மண்ணின் பிள்ளைகளை (நம் சூழலுக்கு உகந்...