விவசாயம் சார்ந்த சுற்றுலா

சுற்றுலா நாம் அறிவோம். விவசாயம் சார்ந்த சுற்றுலா என்றால்?

இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது சூழ்நிலையைப் பற்றிய புரிதல் நம் மனதுக்கு சிறிது வேண்டும். அதற்காகவே கீழே சில பத்திகள் தரப்பட்டுள்ளன.

மனிதர்கள் மனிதர்களாக இருக்க மறந்ததால், பேராசை அவர்கள் கண்களை மறைத்ததால், மண்ணையும் இயற்கையையும் விட்டு விலகி, பணம் சம்பாதிக்க வேண்டும், ஆடம்பர வாழ்வு வாழ வேண்டும், மற்றவரைப் போன்ற வசதிகளைப் பெற வேண்டும் என்று ஓடத் தொடங்கினார்கள்.

ஓட்டம், ஓட்டம், ஓட்டம்…

வெகு தூரம் ஓடிய பின்னும் தேடிய அனைத்தும் கிட்டிய பின்னும் இன்னமும் அவர்களது ஆசை அடங்கவில்லை. சோறு போடும் விவசாய நிலங்களை அழித்தாவது வீடு கட்ட வேண்டும், காற்றில் மாசு ஏற்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளைக் கட்டி வெறித்தனமான உற்பத்தி முறையை பின்பற்ற வேண்டும், நீராதாரங்களைப் பாழாக்கி மக்கள் நோயில் வீழ்ந்தாலும் பணம் கொடுக்கும் எதையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணங்களால், இன்றைய விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

விவசாயத்திலும் கூட பணம் கொடுக்கும் பயிர்களை மட்டுமே வளர்க்க முற்படுகிறோம். மண்ணின் பிள்ளைகளை (நம் சூழலுக்கு உகந்த நாட்டு பயிரினங்கள்) வாட விட்டு விட்டு இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் மூலம் நமது சூழலுக்கும் உடலுக்கும் ஒவ்வாத காய்கறிகளையும் பயிரினங்களையும் வளர்க்கிறோம். அவற்றை மண்ணில் விளையச் செய்ய செயற்கை உரங்களையும் பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்துகிறோம்.

மொத்தத்தில் மண்ணையும் நாசமாக்கி, கண்ணை மறைத்த பணத்தை தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

நீரும், நிலமும், காற்றும் மாசடைந்து போய் விட்டன.

திரும்பிய பக்கம் எல்லாம் நோய்களும், நோயாளிகளும் அவர்களை உறிஞ்சிக் கொள்ளும் (கொல்லும்) மருத்துவமனைகளும்.

“மனிதா இவையனைத்தையும் செய்த பின் நீ அடைந்ததென்ன? இன்னமும் நாட்டில் ஏழைகளும், நோயாளிகளும் அதிகமாகிப் போனதைத் தவிர? பணத்தை உண்ண முடியுமா உன்னால்? பணத்தைத் தின்று ஒரு சிறுநீரகத்தை அல்லது இருதயத்தை சரியாக இயங்கச் செய்ய முடியுமா உன்னால்? உனக்குள் இன்னமும் குழப்பமும் மனதில் இருளும் அதிகமாகிப் போனதன் காரணம் என்ன? நீ சரியான வழியில்தான் சென்று கொண்டிருக்கிறாயா?”

மனசாட்சியின் சாரமாரியான சாட்டையடி கேள்விகள்…

தோண்டத் தோண்ட, கிணற்றில் விஷ வாயுவைப் போல தவறான பதில்கள்…

எங்கே நாம் தொலைந்து போனோம்?

நம் முன்னோர்கள் எளிமையாக வாழ்ந்தாலும் நோயில்லாமல் வாழ்ந்தார்களே?

ஒரு வேளை உண்டாலும் சுவையான உணவை உட்கொண்டார்களே?

தாத்தா பாட்டி, பேரன், பேத்தி, கொள்ளு, எள்ளுப் பேரன்கள், பேத்திகள்…

மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்…

இவையெல்லாம் இனி கனவுகள்தாமா?

சுத்தமான நீர் வேண்டுமா? காசு கொடுத்து புட்டியில் வங்கி குடியுங்கள்.

சுத்தமான காற்று வேண்டுமா? காசு கொடுத்து ஆக்சிஜென் நிலையங்களில் மூச்சிழுத்துக் கொள்ளுங்கள்.

எங்கெங்கும் யாவருக்கும் மன உளைச்சல்…

காலையில் எழுவது முதல் மாலையில் வேலை முடித்து திரும்பும் வேளை வரை மன உளைச்சல்…

இப்படியா வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்?

ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமென்றால்…

“அடிப்படையில் இயற்கையை விட்டு விலகி போன மனிதன் அதனை அழிக்கவும் முற்பட்டதால் உண்டான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்”, என்பதே.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமா நம்மால்? மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்து கொண்டு, அவற்றைச் சரி செய்ய மேலும் தவறுகளையே பயன்படுத்தி ஒரு கொடிய வட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நம்மால் எப்படி திரும்ப முடியும்? அதற்கான வழி என்ன?

அதுதான் இயற்கையை நோக்கித் திரும்புவது. இயற்கையை நோக்கித் திரும்புவதே நமது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வாக அமையும். நாம் மீண்டும் இயற்கையை நோக்கித் திரும்பலாம். திரும்புவோம். ஆனால், எப்படி?

காட்டு வாழ்க்கைக்கு மீள்வது பற்றி நான் இங்கு கூறவில்லை. ஆனால், நிலத்தையும், நீரையும், சுற்றுச் சூழலையும் பாதிக்காத விவசாயம் இருக்கிறதே… நாம் ஏன் இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்ப கூடாது? நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இயற்கை விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுமே ஆம்.

நகரத்தை நோக்கி நகர்ந்து போன விவசாயிகள் அங்கே நரகத்தில் அல்லவா வசித்துக் கொண்டிருகிறார்கள். கேள்வி கேட்டால், விவசாயத்திற்கு நீர் இல்லை, வேலை செய்ய ஆட்கள் இல்லை. உரம் வாங்கப் பணம் இல்லை என்று இல்லைப் பாட்டு பாடுகிறார்கள்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் …என்ற பாடல் ஏனோ காதில் ஒலிக்கிறது.

அப்படி என்றால் விவசாயிகள் சொல்வது எல்லாம் பொய்யா, அவர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல் நகரங்களை நோக்கி வந்தது உண்மை இல்லையா என்றால், ஆம் உண்மைதான், ஆனால், அவர்கள் தாங்களாக வரவில்லை, தங்களது நிலத்தில் இருந்து விலக்கபட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். செலவில்லாமல் விவசாயம் பார்த்து தன்னிறைவோடு வாழ்ந்து கொண்டிருந்த விவசாயி கடன் வாங்கி விதைகளும், செயற்கை உரங்களும் வாங்கினான். மாடுகளை விற்று விட்டு tractor வாங்கினான். தவறான அணுகு முறைகளால் மண் மலடானது. மரங்களும், மாடுகளும் காணாமல் போக, மழை பொய்த்தது. வீட்டுக்கு மேல் கடன், காட்டுக்கு மேல் கடன் என்று  கட்டியவளின் கழுத்துத் தாலியும் கந்து வட்டியில் காணாமல் போக, தலை மேல் போட்ட துண்டுடன் நகரங்களில் கூலி வேலை செய்ய புறப்பட்டான் அவன். காலையில் எழுந்ததும் காலில் மிதிபடும் பனித்துளிகளில் ஆனந்தமாக நடந்தவனுக்கு நரகத்து அழுக்குச் சாலைகள் புகலிடம் அளித்தன. கம்பங்கூழ் குடித்து நிமிர்ந்து நடந்தவன், காலையில் டீக்கும், பொறைக்கும் ஆலாய்ப் பறந்தான். ஆடும், மாடும், நாயும், கோழிகளும் சுற்றித் திரியும் பரந்த இடங்களில் இருந்தவனுக்கு கொசுக்கள் நிறைந்த குடிசைகளே படுக்கும் இடங்களாயின.

இன்றும் நகரத்துத் தெருக்களில் பிச்சை எடுக்கும் பத்து பேரில் பாதி பேர்கள் விவசாயியாக இருந்தவர்களாகத்தான் இருக்கும்.

இதற்கு வழிதான் என்ன?

விவசாயிகள் மீண்டும் விவசாயம் நோக்கி திரும்ப வேண்டும். நகரப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதைப் போல கிராமங்களிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

ஸ்திரமற்ற விவசாயத்தை நிலையான லாபம் தரும் தொழிலாக உயர்த்த வேண்டும். நிலத்தில் பாடுபடும் ஒவ்வொருவருக்கும் சிறப்பான வாழ்க்கை அமைய வகை செய்ய வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்கள் கிராமங்களில் துவக்கப்பட வேண்டும். விவசாயப் பொருட்கள் விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் மதிப்புக் கூட்டப் பட்டவையாக மாற வேண்டும். அவை விவசாயக் கூடங்களில் இருப்பு வைக்கப்பட்டு லாபம் வரும் காலங்களில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

பாமர விவசாயி பரந்த அறிவு கொண்ட சிறந்த வணிகனாகவும் பரிணமிக்க வேண்டும். இத்தகைய முயற்சிகளில் ஒரு முன்னோடியாகத்தான் நமது இந்த விவசாயம் சார்ந்த சுற்றுலா என்ற முயற்சி.

 

இந்த எண்ணத்தை எப்படி வடிவமைப்பது?

நமது அமைப்பில் இருக்கும் விவசாயக் குழுவினரில் விருப்பப்படும் நண்பர்கள் ஒன்று சேர வேண்டும். விவசாயம் சார்ந்த சுற்றுலா குழு என்ற ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் முக்கிய நோக்கம் பொது மக்களிடையே விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொது மக்களின் ஒத்துழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் பெற வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே நேரடி தொடர்பினை ஏற்படுத்த வேண்டும்.

பொது மக்களிடையே இருக்கும் தவறான எண்ணங்களை அகற்றுவது நமது அடுத்த நோக்கம். விவசாயிகள் படும் சிரமங்கள், எதிர்கொள்ளும் இன்னல்கள், அவர்களின் தேவைகள் ஆகியவற்றை பொது மக்களுக்கு உணர்த்தும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் விவசாயிகளை மதிக்கும் வகையில் இந்த விவசாயம் சார்ந்த சுற்றுலா அமைய வேண்டும்.

நமது அடுத்த நோக்கம் விவசாயிகளின் விளைச்சலை சந்தைப் படுத்துவது. நமது விவசாயம் சார்ந்த சுற்றுலாவில் இணையும் பொதுமக்களின் தொடர்பு தகவல்களைக் கணனியில் சேமித்துக் கொண்டு, கைபேசி செயலிகள் மூலம் தொடர்ந்து நமது விற்பனைக்கு உள்ள பொருட்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். அவர்களின் தேவைகளைப் பகுத்தறிந்து இன்னாருக்கு இன்ன இன்ன பொருட்கள் தேவை என்பதையும் அவை எந்தெந்த விவசாயிகளிடம் கிடைக்கிறது என்பதையும் ஒன்றிணைக்க முடியுமானால் நாம் பெரிய வெற்றியை அடைய முடியும்.

அடுத்ததாக பொதுமக்களுக்கு அவர்களின் மன உளைச்சலையும் நகர வாழ்வின் துன்பங்களையும் மறக்கும்படிக்கு பசுமையான காட்சிகளும் இயற்கையின் அன்பான அரவணைப்பின் கதகதப்பும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இயற்கையின் தூய்மை, கண்களுக்கு இதமான பச்சை, பறவைகளின் கானங்கள், மேகப் பந்துகளின் தீராத பயணங்கள், தெளிந்த நீர் நிலைகளின் பளிங்குக் காட்சிகள், வானுயர்ந்த மரங்களின் கீழே கிடைக்கும் நிழல், நிழலிநூடே வெள்ளி காசுகளாக இறைந்து கிடக்கும் சூரிய வெளிச்சம், மெல்ல வருடிச் செல்லும் தென்றல், துள்ளிக்குதிக்கும் கன்றுகள், ஆட்டுக் குட்டிகள், சாணி மேட்டை கிளறி புழு தின்று கொக்கரித்துக் கூவும் சேவல்கள், அவற்றின் பேடுகள், கிவ் கிவ் என்று அவற்றை சுற்றி வரும் கோழிக் குஞ்சுகள், வானில் வட்டமிடும் ஒற்றைக் கழுகு…

மனம் நிறைந்து வயிறு குளிரும் கிராமியம் சார்ந்த எளிய, சத்து மிகுந்த உணவு வகைகள்…

எளிய கள்ளமில்லாத கிராம மக்களின் அன்பான வரவேற்பு, அவர்களின் அன்பான உபசரிப்புகள்…

இத்தனையும் நகர மக்களுக்கு கிடைக்கும்படி நமது விவசாயம் சார்ந்த சுற்றுலா இருக்க வேண்டும்.

இவற்றுடன் நமது கிராம வாழ்வு மற்றும் இயற்கை விவசாயம் சார்ந்த பழக்க வழக்கங்களை நகர மக்களுக்கு கற்றுத் தருவதற்காக, பயிற்சி வகுப்புகளும்  வடிவமைத்து அதில் விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றை நடத்தலாம். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கலாம்.

பொதுவாக சுற்றுலா முடித்துச் செல்லும் ஒவ்வொருவரும் தமது நெருங்கிய சொந்தங்களை கண்டு விட்டுச் செல்வது போல மனம் நிறைந்து புதிய மனிதர்களாக, புதிய எண்ணங்களுடன் தமது நகரங்களுக்குச் செல்லும் வகையில் நமது சுற்றுலா அமைய வேண்டும்.

 

எவ்விதம் வடிவமைப்பது?

ஒரு நாள், ஓரிரு நாட்கள், ஒரு வாரம் போன்று சுற்றுலாவை தீர்மானிக்கலாம்.

குழு அமைப்பினர் வெவ்வேறு ஊர்களில் இருந்தால் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப உணவு, இருப்பிடம், சுற்றிக்காட்டுதல், பயிற்சி தருதல், இளைப்பாற வசதிகள் செய்தல், கிணற்று நீச்சல், மரம் ஏறுதல், பம்பு செட்டுகளில் குளிக்க வகை செய்தல், ஆடு, மாடுகளைப் பராமரித்தல், நடவு செய்தல், அறுவடைக்கு உதவுதல், புகைப்படங்கள் எடுக்க உதவுதல், என வேலைகளைப் பிரித்துக் கொண்டு ஒரு கிராமத்தில் தொடங்கி பல கிராமங்களைச் சுற்றி வந்து கடைசியில் தங்குமிட வசதியுள்ள இடத்தில் தங்க உதவ வேண்டும்.

படித்த இளைஞர்கள் அவர்களுக்கு துணையாக கூட சென்று ஒவ்வொன்றையும் பற்றி விளக்கி கூறுவதுடன் அவர்களின் விருந்தோம்பலை செவ்வனே செய்து தர வேண்டும். இடையில் ஒவ்வொருவரும் தமது விளைபொருட்களை கண்ணியமான (சிறந்த தரம், கட்டுபடியாகக் கூடிய ஒரே விலை, நேர்த்தியான plastic இல்லாத இயற்கை முறையில் அமைந்த packing)  முறையில் சந்தைப் படுத்த வேண்டும்.

வெவ்வேறு ஊர்களில் உள்ள குழுவினருடன் தொடர்பு கொண்டு தமது வாடிக்கையாளர்களை அவர்களுக்குள் மாற்றி அனுப்பி வைக்கும்போது வாடிக்கையாளர்களுக்கும் புதிய ஊர்களைப் பார்த்த திருப்தி கிடக்கும். நமக்கும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

பொதுவான வணிக மையங்களை ஏற்படுத்தி விலை பொருட்களை சந்தைப் படுத்தும் முயற்சியும் செய்யலாம். வணிக மையங்களின் இடையே பொருட்களின் பரிவர்த்தனையும் செய்யலாம். இதனால், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி ஏற்படும்.

 

குழுக்களின் நடவடிக்கைகள் : ‘நகர மக்கள் கிராமத்தை நாடி’

 

விருந்தோம்பல் – உணவு:

நல்ல இயற்கையான, அப்போது விளைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சத்து மிகுந்த சிறுதானியங்கள், கைகுத்தல் அரிசி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு சாப்பாடு, பலகாரங்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை செய்து தரலாம்.

 

சுற்றிக்காட்டுதல்:

பெரிய பண்ணைகள், பெரிய தோட்டங்கள் ஆகியவற்றை வைத்து இருப்பவர்கள் தமது இடங்களை நகர மக்களுக்கு சுற்றிக் காட்டலாம். அவ்விதம் சுற்றும்போது அவர்களின் மனத்தைக் கவரும் வகையில் பூச்செடிகள், விவர பலகைகள் வைக்கலாம்.

 

பயிற்சி தருதல்:

கீழ்க்கண்ட வகைகளில் நகர மக்களுக்கு பயிற்சிகளைத் தரலாம்.

  1. கிணற்று நீச்சல்
  2. மரம் ஏறுதல்
  3. ஏர் ஓட்டுதல் / மாட்டு வன்டி
  4.  பண்ணை வேலைகள்
  5. ஆடு, மாடுகளைப் பராமரித்தல்
  6. களை எடுத்தல்
  7. பூச்சி மேலாண்மை
  8.  நடவு செய்தல்
  9. அறுவடைக்கு உதவுதல்
  10.  வெண்ணை தயாரித்தல்
  11. விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  12. வீட்டுத் தோட்டம் பராமரிப்பு
  13. விளைச்சலை எப்படி பிரித்தெடுத்தல்
  14. காய்கறி பறித்தல்

மேலும் அவர்கள் இளைப்பாற வசதிகள் செய்தல், பம்பு செட்டுகளில் குளிக்க வகை செய்தல், புகைப்படங்கள் எடுக்க உதவுதல் ஆகியவை நகர மக்களின் மனத்தை மாற்றி கிராமங்களின் மேல் அவர்கள் விருப்பம் கொள்ள வழி செய்யும்.

தங்குமிடம்:

தமது தோட்டங்களில் தங்குமிடங்களைக் கட்டி வைப்பதன் மூலம் நகர மக்கள் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து இயற்கையை ரசிக்கவோ அல்லது தேவையானவற்றைக் கற்கவோ முடியும்.

விற்பனை:

ஒவ்வொருவரும் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்த முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். சுத்தமான இடத்தில், அழகாக அடுக்கி வைக்க வேண்டும். தரமான பொருட்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒவ்வொன்றின் விலையையும் அவற்றின் அருகில் எழுதி வைத்திருக்க வேண்டும். அவற்றின் பயன்கள் அடங்கிய கையேடுகளையும் முடிந்தால் வைக்கலாம். பாரம்பரிய ரகங்களாக இருந்தால் அவற்றின் பெயர் அவற்றின் பெருமைகளை எழுதி வைக்கலாம்.

வாங்குபவர் பற்றிய விவரங்களை ஒரு சிறிய பதிவேட்டில் அவர்களையே பதிவு செய்ய வைத்தால், பின்னாட்களில் அவர்களை நாம் மீண்டும் தொடர்பு கொண்டு அஞ்சல் மூலமாக விற்பனையைத் தொடர முடியும்.

கலை :

கிராமங்கள் என்றாலே கலையும், கூத்தும் கண் முன்னே நிற்பவைதாமே. அவற்றில் விற்பன்னர்களை அணுகி தேவையான இடங்களில், தேவையான பொழுதுகளில் நடத்தச் செய்வதன் மூலம் அந்த கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுப்பதுடன் கலைகளையும் வாழ வைக்கலாம். இது போன்ற கலைகளை நடத்துவதன் மூலம் நமது பழமையான கலாச்சாரத்தை மீட்டெடுத்தல் நம்முடைய ஒரு குறிக்கோளாக இருக்க வேண்டும்.

– நாகராஜ்( சென்னை)


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை