வெற்றி பெற்றவர்கள் – டாக்டர் எம்மா நலுயிமா
உகாண்டா நாட்டைச் சார்ந்த எம்மா நலுயிமாஒரு கால்நடை மருத்துவர். தமது நாட்டில் பல உயர் பதவிகளை வகித்த இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார். கால்நடை மருத்துவத்தில் இளநிலை அறிவியல் படிப்புடன், உகண்டாவின் கம்பாலா(தலைநகர்)வில் மகீரேறே பல்கலைக்கழகத்தில் கால்நடை உடல்நலம் சார்ந்த சேவைகள் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்.தமது நாட்டின் விலங்குகளுக்கான மரபியல் வளங்கள் மற்றும் தகவல் சேகரிப்பு துறையில் வேலை செய்திருக்கிறார். உகண்டாவின் என்டெபீ நகரத்தில் உள்ள கால்நடை சூழலியல் நிலையத்தில் அதிகாரியாக பணி புரிந்துள்ளார். உகாண்டா அதிபர்யோவேரிகாகுடா முசேவெனி அவர்களின் சொந்த பண்ணையில் மரபியல் சார்ந்த செயற்கைக் கருவூட்டல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளைச் செய்திருக்கிறார்.

இவரது சாதனைகளை பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கும். இவரே தனது வாழ்க்கையில் தான் சாதித்ததை,பின்வருமாறு மிகவும் சுவையாக விவரிக்கிறார்.
இவரது நாட்டிலும் நமது இந்தியாவைப் போலவே விவசாயம் ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. நம்நாட்டில் பெற்றவரின் சொத்துகள் பிள்ளைகளுக்கு என்ற முறையில் பாகம் பிரித்து நிலங்கள் சுருங்குவதைப் போல இவருக்கும் இவரது மாமனாரின் வழியில் வெறும் இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்தது. (இவரதுமாமனாருக்குஒருசதுரமைல்நிலம்இருந்ததும்அவருக்கு 40 பிள்ளைகள்இருந்ததும்வேறுவிஷயம்). அந்த நிலத்தில் இவர் செய்த சாதனைகள் நம்மைப் பிரமிக்க வைக்கும்.
பெரிய நிலம் சுருங்கி இரண்டு ஏக்கர் நிலமே கிடைத்தாலும் அதிலும் ஒரு ஏக்கர் நிலத்தில் இவர் அதிசியம் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.
காலை எழுந்தவுடன் இவர் தமது கால்நடைகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே மற்ற வேலைகளைத் துவக்குகிறார்.
“நீங்கள் எங்களைப் பார்த்துக் கொண்டால் நங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்”
-அவரது ஒருங்கிணைந்த பண்ணையில் இருக்கும் அவரது கால்நடைகளின் பதிலாக அவர் இதைப்புரிந்து கொள்கிறார்.
நமது நிலத்தை சரிவர பார்த்துக் கொள்ள முடிந்தால் அது நமக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தரும்என்று கூறும் எம்மா தனது நிலத்தை நான்கு பகுதிகளாக பிரித்து பராமரிப்பதாகக் கூறுகிறார்.
முதல் பகுதியில் கால் ஏக்கர் நிலத்தில் இவர் பன்றிகளை வளர்க்கிறார்.
2010 ம் ஆண்டு வெறும் 5 பன்றிகளுடன் தனது பண்ணையைத் துவங்கினார் எம்மா. கம்போரோ எனப்படும் இனத்தை சேர்ந்த அந்த பன்றிகளில் ஒரு ஆணுக்கு நான்கு பெண் பன்றிகள் இருந்தன. இவற்றை சிறப்பாக பார்த்துக் கொள்வதில்தான் பணம் ஈட்டுவது இருக்கிறது என்பதை எம்மா உணர்ந்திருந்தார். பன்றிகள் இவரை ஏமாற்றவில்லை. வருடத்திற்கு இரண்டு முறை ஒவ்வொரு பன்றியும் 12 குட்டிகளை ஈன்றன . விரைவில் இவை 30 பெண் பன்றிகளுக்கு 5 ஆண் பன்றிகள் என்ற அளவுக்கு வளர்ந்தன. ஒவ்வொரு பன்றியும் வருடத்திற்கு 24 குட்டிகள் ஈனுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். அவருக்கு 720 குட்டிகள் வருடத்திற்கு விற்பனைக்குக் கிடைத்தன. தாய்ப் பன்றிகளை அவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரவழைத்துக் கொண்டார்.
பன்றிகளின் சாண கழிவுகள் பண்ணையை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவையே கோழிகளுக்கும் மீன்களுக்கும் உணவை உற்பத்தி செய்து கொடுக்கின்றன. தினமும் பன்றிகளின் சாணத்தை காலையில் சேகரித்து 6 லிருந்து 8 மணி நேரம் வரை திறந்த வெளியில் வைத்து விடுவேன். அந்த சாணத்தை நோக்கி ஈர்க்கப்படும் பூச்சிகள் அதில் முட்டையிடும். அதன் பின்னர் 4 அல்லது 5 நாட்களுக்கு அதை மூடி வைத்து விடுவேன். பின்னர் திறந்து பார்க்கும்போது அதில் புழுக்கள் பேரளவில் தோன்றிவிடுகின்றன. அவையே கோழிகளுக்கும் மீன்களுக்கும் சிறந்த உணவு. அந்த புழுக்களை முழுவதும் நீக்கிய பின்னர் மீதம் இருக்கும் சாணத்தில் மண் புழுக்களை விட்டு விட்டால் அவை மிகச்சிறந்த உரத்தினை நமக்கு தயாரித்துத் தரும். காய்கறிகள் வளர்க்க இது நல்ல உரம். இந்த முறையில் கோழி தீவனம், மீன்களின் தீவனம் மற்றும் இரசாயன உரம் ஆகியவற்றை தவிர்க்க முடிவதால் உற்பத்தி செலவுகளில் 80% எனக்கு மிச்சமாகிறது. எனவே என்னைப்பொறுத்தவரை பன்றிகளின் கழிவு எனக்கு தங்கத்திற்குச் சமம் என்று இவர் கூறுகிறார்.
இரண்டாவதாக, ஒரு கால் பகுதி நிலத்தில் இவர் மாடுகளை வளர்க்கிறார். உகண்டாவின் பெரும்பகுதி மக்கள் சமையல் செய்வதற்கு மரங்களை வெட்டி விறகாகவும் கரியாகவும் பயன்படுத்துகிறார்கள். அது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று கூறும் இவர் தனது தோட்டத்தில் காற்று புக முடியாத ஒரு தொட்டியில் மாட்டின் சாணத்தை சேகரித்து அதிலிருந்து பயோ காஸ் தயாரிக்கிறார். அது அவரது சமையல் வேலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதன் காரணமாக அவர் விறகு, கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. மேலும், சாண எரிவாயு எடுத்தவுடன் மீதமுள்ள மட்டுச் சாண கழிவு மண்ணுக்கு சிறந்த உரமாக ஆகி விடுகிறது.
மூன்றாவதாக, எப்படி கோதுமை அமெரிக்காவுக்கும், அரிசி ஆசிய நாடுகளுக்கும், சோளம் தென் ஆப்பிரிக்காவுக்கும் முக்கியமோ அதே போல உகண்டாவிற்கு வாழை மிக முக்கியமான உணவு ஆகும் என்று சொல்லும் அவர் தனது அடுத்த கால் பகுதி நிலத்தில் வாழையை பயிரிட்டிருக்கிறார். தனது நிலத்தைப் பார்க்கும் யாரும் இந்த நிலத்தில் பயிர்கள் வளரா என்றுதான் சொல்வார்கள். செந்நிறத்தில் இருக்கும் வளமற்ற இத்தகைய நிலங்களில் பயிர்கள் வளராது; மாறாக, கரிய நிற மண்ணே வளமான மண் என்று அவர்களது நாட்டில் பாட புத்தகங்கள் குறிப்பிடுவதாக சொல்கிறார்.
“நீங்கள் எம்மிடத்தில் வளர முடியாது” என்று இவரது மண்ணே பயிர்களிடம் சொன்னாலும், “எங்களுக்குத் தேவையான தண்ணீரும், உரமும் இருந்தால் நாங்கள் வளர்வோம்”, என்று பயிர்கள் பதிலிறுக்கும், என சுவைபட பேசும் இவரது தோட்டத்தில் வாழை நிமிர்ந்து உயரமாக வளர்கிறது.
மற்ற விவசாயிகள் வாழைக்கு ஈரப்பதம் நிறுத்தவேண்டி மூடாக்கு முறையை அனுசரிப்பார்கள். ஆனால், இவர் வாழைகளுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் மூடாக்கு பைகளைப் புதைத்து வைத்து தண்ணீரும் உரமும் கொடுப்பதால், வாழை மரங்கள் தங்களுக்குத் தேவையான நீரையும், உணவையும் மெல்ல கிரகித்துக்கொள்கின்றன. கால் ஏக்கர் நிலத்தில் பெரிய பெரிய வாழைத் தார்கள் போதுமானஎண்ணிக்கைகள் கிடைக்கும் என்று இவர் பெருமிதப் படுகிறார்.

நான்காவதாக, மீதம் உள்ள கால் பகுதி நிலத்தில் இவர் பசுமைகுடில்களில் மீன்களை வளர்க்கிறார். 2 மீட்டர் அகலம் 4 மீட்டர் நீளம் மற்றும் ஒரு மீட்டர் உயரம் கொண்ட பிரத்தியேகமான தொட்டிகளில் 1000 க்கும் மேற்பட்ட பெரிய வகை (cat fish or tilapia) மீன்களை வளர்க்கிறார். பசுமைக்குடில்களில் வளரும் மீன்கள் கவனமான பராமரிப்பிலும், முறையான உணவு அளித்தலாலும் ஆறு மாதங்களில் ஒரு கிலோ எடையை எட்டுகின்றன. எட்டு வாரங்களில் 6000 மீன்களை அறுவடை செய்யும் இவர், அறுவடைக்கு ஒருவரே போதும் என்கிறார்.


மேலும், அதன் மற்றொரு பயனாக,,Aquaphonix முறையில் காய்கறிகளை பயிரிட முடிகிறது. மீனின் கழிவுகள் கலந்த நீரானது குழாய்கள் வழியாக தாவரங்களின் வேர்களை தொட்டுச் செல்லும்போது, அதில் இருந்து அம்மோனியா, நைட்ரஸ் ஆகியனவற்றை தாவரங்கள் உறிந்து கொண்டு சுத்தமான, பிராணவாயு நிறைந்த நீரை மீண்டும் மீன்தொட்டிக்கே அனுப்புகின்றன. மீன்களுக்கு தேவையான பிராணவாயு நிறைய கிடைக்கிறது. இம்முறையில் 8 மீட்டருக்கு 15 மீட்டர் உள்ள நிலத்தில் இவர் தக்காளி வளர்க்கிறார். 6 மாதங்களில் 4800 கிலோ தக்காளி கிடைக்கிறது. அதன் மூலம் 2700 அமெரிக்க டாலர்கள் இவருக்கு கிடைக்கிறது.
இவையன்றி hydrophonix முறையில் தீவனப்பயிர்களையும் வளர்க்கிறார். 20 அடிக்கு 6 அடி உள்ள இடத்தில் மண்ணில்லாமல் வெறும் தண்ணீர் மூலம் 6 நாட்களில் வளரும் தீவனமானது 100 பன்றிகளுக்கு பசுந்தீவனமாக மாறுகிறது. அல்லது 20-25 பசுக்களுக்கு, இல்லாவிட்டால் 1500 கோழிகளுக்கு பசுந்தீவனமாக கொடுக்க முடிகிறது. விளைவாக, பன்றிகளின் எடை கூடுகிறது. பசுக்கள் தரமான பாலை வழங்குகின்றன. கோழிகளின் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன.

இப்படி ஒரு ஏக்கர் நிலத்தை 4 பகுதிகளாக பிரித்து, ஒருங்கிணைந்த பண்ணையத்தை பிரமிக்கத்தக்க வகையில் செய்து கிடைக்கும் வருமானத்தில் இவரும், இவரது கணவரும் சேர்ந்து அந்த பகுதி குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை கட்டி கல்வி போதித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக மூன்று விஷயங்களை குழந்தைகளுக்குப் போதிக்கிறார்கள். அவை
1. நேரத்தின் முக்கியத்துவம்
2. பணத்தின் அருமை
3. சேமிப்பின் அவசியம்
இவை சிறு பிஞ்சுகளின் மனதில் ஆழப் பதியுமாறு சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
இந்தகல்விநிறுவனத்தின்வெற்றிக்குஉதாரணமாக, 10 வயதுள்ள ஒரு சிறுவன் அந்த பள்ளியில் வெறும் 3 மாதங்களே பயின்றவன், விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்றபோது, தனது வீட்டைச் சுற்றியுள்ள வேலிகளைச் சுத்தம் செய்து வாகனங்களின் டயர் போன்றவற்றைக் கொண்டு மிகச் சிறந்த காய்கறித் தோட்டம் அமைத்து விட்டான். அவனது பெற்றோர் அவனது செயலை மிகவும் ரசித்ததுடன் அந்த தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தங்களுக்குப் போக மீதமானவற்றை அருகிலிருப்போருக்கு விற்பனை செய்து மகிழ்ந்தனர்.


நம் ஒவ்வொருவருக்கும் என்ன கிடைத்திருக்கிறதோ அதனைச் சரிவர பயன்படுத்த வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்ததைப் பயன்படுத்த முடிந்தால், நான் சாணத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதைப் போல எவரும் வெற்றி பெற முடியும் என்று எம்மா பெருமிதத்துடன் தனது உரையை முடிக்கிறார்.
நம்மிடம் இருக்கும் நிலத்தில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு இது போன்ற அமைப்புகளை வடிவமைத்துக் கொள்ளும்போது விவசாயம் லாபகரமானதாக மாறும் என்பது, இவரது சாதனைகளைப் பார்க்கும்போது தெள்ளெத் தெளிவாகிறது. மண் சரியில்லையா, மனம் தளர வேண்டாம்; தண்ணீர் போதுமான அளவு இல்லையா, வருந்த வேண்டாம்; நம் நிலத்தில் எது சரியாக வரும், என்ன செய்தால் லாபம் கிடைக்கும் என்பனவற்றை தீர யோசித்து தீர்க்கமாகவும், திடமாகவும் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எம்மா ஒரு உதாரணம். நமக்குக் கை கொடுக்க கால்நடைகளும், மரங்களும், பழம் தரும் தாவரங்களும் ஏன் சாதாரண புழுக்களும் கூட தயாராக இருப்பதை, இவரது வெற்றி நமக்கு உணர்த்துகிறது. நமது கண் முன்னே கொட்டிக் கிடக்கும் செல்வத்தை எப்படி அள்ளுவது என்று அறிந்து கொண்டால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பின்குறிப்பு:
ஆப்பிரிக்காவில் இருக்கும் உகாண்டாவைப் பற்றிய சில விவரங்கள்:
கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சூடான், தான்சானியா, காங்கோ ஆகிய நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் நாடு உகாண்டா. கடற்கரை இல்லாத குறையை ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய விக்டோரியா ஏரி தீர்த்து வைக்கிறது. பெரும்பாலும் பீடபூமியில் இருக்கும் இந்த நாடு, நெருப்பைக் கக்கும் எரிமலைகள், உயர்ந்த மலைச்சிகரங்கள் நாலாபுறமும் சூழ, இயற்க்கை எழில் கொஞ்சும் சூழலில் பசுமையாய் காட்சி அளிக்கிறது. பெரும்பாலும் வளமிக்க மண்ணைக் கொண்ட இந்த நாட்டில், விக்டோரியா ஏரியின் பாசன நிலம் உலகின் இரண்டாவது வளமிக்க பகுதியாக இருக்கிறது. 5 செமீ லிருந்து 20 செமீ வரை மழை பொழிவு இருக்கிறது. தெற்கில் அடர்ந்த மரக்காடுகளைக் கொண்ட இந்த நாடு மத்தியிலும் வடக்கிலும் பரந்த புல்வெளிகளுடன் அமைத்திருக்கிறது. பெரும்பாலும் விவசாயிகளைக் கொண்ட இந்த நாட்டில் கல்வி பயின்றவர்கள் சதவிகிதம் 70 க்கும் மேலே இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உகாண்டா இருக்கிறது.
தமிழ் மொழியாக்கம் – நாகராஜ், சென்னை
நன்றி:
Comments
Post a Comment