இப்படியும் மதிப்பு கூட்டலாம் – பரந்தாமன்
பரபரப்பான அமெரிக்கா. அங்கே எல்லா வசதிகளும் நிறைந்த, குறைகளற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை. சுத்தம், சுகாதாரம், தனி மனித சுதந்திரம், ஊழல்களில் சிக்கித் திணராத அரசாங்கம். கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்று இன்றைய இந்தியர்களின் கனவு காணும் நாடு.
இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த மாதிரி அமெரிக்காவில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை வேற்று கிரகவாசிகள். துன்பம் அறியாதவர்கள்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில், ஆற்காட்டில் இருக்கும் விளாப்பாக்கம் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் அப்படிதான் இருக்கும்.
அப்படி அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு தம்பதியினர் திடீரென இந்த கிராமத்திற்கு வந்து இனி நாங்கள் இங்கேதான் தங்க போகிறோம், உங்களில் ஒருவராக, என்றபோது அந்த மக்களின் பதில் எப்படி இருக்கும் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
கை நிறைய சம்பளம், நேரப்படி வேலை, எண்ணப்படி வாழ்க்கை என்று உச்சத்தில் இருந்தவர்களுக்கு இன்னமும் மகிழ்ச்சியூட்ட ஒரு பெண் மகவு பிறந்தது. இந்தியாவில் குழந்தை பிறந்தால் அது பாட்டி வீட்டில் பெரியவர்களின் கண்காணிப்பில் வளரும். குழந்தை பிறக்கும் முன்பே பெரியவர்கள் பல முன்னேற்பாடுகளைச் செய்வார்கள். தாய்க்கும், மகவுக்கும் பாதுகாப்பு, ஊட்டம் என்று பலவாறு யோசித்து முன்னேற்பாடுகளுடன் காத்திருப்பார்கள்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவில் நமக்கு நாமே திட்டம்தான். திண்டாட்டம்தான். நாம்தான் நமது குழந்தையை வளர்க்க வேண்டும். மலைப்பான விஷயம்.
குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தியபோது அவர்களை அதன் உணவு பெரிய அளவில் யோசிக்க வைத்தது. எதை கொடுப்பது, எது இந்த சிறிய வயிற்றுக்கு தீங்கு இழைக்காது நன்மை செய்யும்? என்றெல்லாம் யோசித்தபோது நம்மை சுற்றி இருப்பதெல்லாம் தீங்கான உணவுகளே என்பது புரிந்தது.
குழந்தை மட்டுமல்ல நாமும் சாப்பிட உகந்த உணவுகளே இல்லை என்று சொல்லிவிடலாம். எல்லாம் இராசயன மயம். விளைச்சலில் துவங்கி, பதம் பிரித்தல், பக்குவப்படுத்தல், டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு கொணர்தல் வரை பலவகை இரசாயனங்கள்.
‘நல்ல உணவு வேண்டும்’, …தேட ஆரம்பித்தார்கள்…
நல்ல உணவு என்று தேடியபோது நமது பாரம்பரிய உணவு வகைகளே முன் நின்றன. அவற்றை வாங்க முயன்றபோது நன்கு தெரிந்தவர்களை மட்டுமே நம்ப முடியும் என்று தெரிந்தது. இல்லாவிட்டால், நமக்கு வேண்டியதை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும்.
தேட தேட கதவுக்குள் கதவாக பல கதவுகள் திறந்தன…
குழந்தை வளர்ப்பில் ஆரம்பித்த தேடல் நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்களிடம் வந்து நின்றது.
தேடல்கள் புரிதல்களாயும், புரிதல்கள் உணர்தல்களாயும், உணர்ந்தவை கற்றவையாகவும் மாறின.
எது தவறு, எது சரி, என்ன செய்ய வேண்டும்… தெளிவு பிறக்க ஆரம்பித்தது. நீண்ட வாதங்கள், பிரதி வாதங்கள், என்று வளர்ந்து, உள்ளார்ந்த ஒரு ஏக்கம் அமெரிக்காவை விட்டு இந்தியா திரும்ப வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
இவர்கள் தத்தம் தாய் தந்தையர்களுக்கு முதலில் பேசி புரிய வைத்தார்கள். தெளிவான வாதங்கள் முதலில் இவர்களது பெற்றோரை ஒப்புக் கொள்ள வைத்தன.
பணமும், பதவியும் மட்டுமே இல்லை வாழ்க்கை. உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும்; அந்த ஆரோக்கியம் நல்ல இயற்கையான, சத்தான உணவில்தான் இருக்கிறது; அந்த இயற்கையான உணவு வேண்டுமென்றால் இயற்கை விவசாயத்தில்தான் கிடைக்கும்.
பெற்றோரையும், உற்றாரையும் சம்மதிக்க வைத்து, ஒரு நல்ல நாளில் அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியா திரும்பினார்கள்.
அவர்களுக்கு எதிர்பாராத இனிய அதிர்ச்சியாக சௌதி அரேபியாவில் இருந்து இவரது தம்பியும், சென்னையில் இருந்து இவரது தந்தையும் தத்தம் பணிகளை விடுத்து இவர்களுடன் வந்துவிட, அங்கே முதலில் குடும்ப ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.
ஆட்டு மந்தையில் வழக்கமான பாதையில் செல்லும் ஆடுகளில் ஒன்று சிறிது மாறினாலும் பிற ஆடுகளால் வித்தியாசமாக பார்க்கப்படும். முட்டாள் ஆடு என்ற பட்டம் உடனே தரப்படும். இவர்களுக்கும் கிடைத்தது. ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’, ‘பைத்தியக்காரர்கள்’ என்றெல்லாம் விமரிசனம் எழுந்தபோது நாம் செல்லும் திசை சரியே என்று அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
விமரிசனங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்ட அவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தனர். நமக்கென்று ஒரு நிலம் வேண்டும். அதுவும் நமது சொந்த ஊரில் அல்லது சுற்று வட்டாரத்தில் நல்ல நீர் வசதியுடன் இருக்க வேண்டும். பார்த்த சில இடங்கள் ஓரிரு காரணங்களால் ஒத்து வரவில்லை. எனவே, இன்னமும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு நடுவில், வெளிநாட்டில் வாழ்ந்தது போல இங்கே வாழ முடியாது என்பதால், தமக்கு வேண்டியவற்றை தாமே தயாரித்துக் கொள்ள முடிவு எடுத்தனர். வெளிநாட்டில் எல்லாம் வாங்க முடியும். எதற்கும் யோசிக்க வேண்டாம். செலவு செய்ய பணம் இருந்தால் போதும். இத்தகைய வாங்கும் மனோபாவத்தை மாற்றி தற்சார்பு சார்ந்த வாழ்க்கைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர்.
முதலாவதாக, குளியல் பொடிகள், ஷாம்பு, சோப்புகள், பற்பொடி ஆகியவற்றை தயாரிக்க முடிவு செய்தனர், இவற்றை வெளியில் வாங்கும்போது, என்னதான் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதாகச் சொன்னாலும் அவற்றிலும் ஏதேனும் கலப்படமோ அல்லது இராசனமோ இருப்பதை உணர்ந்தனர். இப்படியாக, இவர்கள் இந்த பொருட்களை தயாரிக்க முடிவெடுத்து முதலில், 35 மூலிகைகளை கொண்டு குளியல் பொடியும், 25 மூலிகைகள் கொண்டு சிகைக்காய் பொடியும் தயாரித்தனர். அது சிறப்பாக அமைந்ததால், வீட்டில் எல்லோரும் விரும்பி பயன்படுத்தினர். அக்கம் பக்கம் கொடுக்கவே அனைவரும் நன்றாக இருப்பதாக சான்று அளித்தனர். இவ்வாறு, இவர்களின் முதல் முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. பின்னர், பற்பொடி, சோப்பு, என்று தங்கள் தயாரிப்பை விரிவுபடுத்தினார்கள். அதுவே, அவர்களது வியாபாரமாக மாறும் என்று அப்போது அவர்கள் நினைக்கவில்லை.
மிகப்பெரிய வெற்றியை பெற்ற எந்த ஒரு தயாரிப்பும், முதலில், தனக்கும், தனது வீட்டிற்கும் தேவை என்று தயாரிக்கப்பட்டவைதாம் என்ற பொன்மொழி நினைவுக்கு வரவே, இவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் நல்லாதரவு கிடைக்கவே, இப்போது இவர்களிடம் 500 க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இப்படியாக, இவர்கள் தற்போது 35 வகை மூலிகைகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குளியல் பொடி, 25 மூலிகைகள் கொண்ட சிகைக்காய் பொடி, 8 வகையான மூலிகைகள் கொண்ட பற்பொடி இவற்றுடன் கைகளால் செய்யப்பட்ட 14 வகையான சோப்புகளையும் தயாரிக்கின்றனர்.
எங்கோ துவங்கிய இவர்களது பயணம், இப்போது இந்த நிலையில் வந்து நிற்கிறது.
மார்க்கெட்டிங் :
“மார்க்கெட்டிங் அப்படின்னு சொன்னவுடனே எனக்கும் மத்தவங்கள போல தல சுத்த ஆரம்பிச்சுது, ஏன்னா நாங்க யாரும் மார்க்கெட்டிங் பின்னணியில இருந்து வரல”, பரந்தாமன் சொல்ல ஆரம்பித்தார்.
தமது பொருட்களை சந்தைப்படுத்த முற்பட்டபோது அவருக்கு மலைப்பு ஏற்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒவ்வொருவரும் சந்தைப்படுத்தலில் இருக்கிறோம், நேரம் வாய்க்கும்போது நமக்குள் இருக்கும் அந்தத் திறமை வெளிப்படுகிறது என்று அவர் சொல்லுகிறார்.
முதலில் தம்மைச் சுற்றியுள்ள உறவினர் மற்றும் நட்பு வட்டங்களில் மாதிரிகளைக் கொடுத்து பார்த்தபோது அவர்கள் இவரிடம் திரும்பி வர ஆரம்பித்தனர். அந்த வெற்றி அவரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல, அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனது பொருட்களைச் சந்தைப் படுத்தினார். அதன் பிறகு தனது அன்மைச் சந்தையை நோக்கி அவரது கவனம் திரும்பியது. அன்மைச் சந்தை என்பது தமது ஊர், தமது சுற்றுவட்டாரம், தமது தெரு இதெல்லாம்.
நம்மைச் சுற்றி ஆயிரம் மக்கள் இருந்தாலும் அதில் 80 சதவிகிதம் மக்கள் நம்மிடம் வாங்க மாட்டார்கள். அப்போது மீதம் இருக்கும் 20 சதவிகித மக்களே நமது இலக்கு. அவர்களிடம் நமது பொருட்களை பற்றிய ஓரளவு புரிதல் இருக்கும். வாங்க மறுப்பவர்களை அப்படியே விட்டுவிடுவது நமக்கு நேரத்தை மிச்சம் பிடித்து தரும் என்று இவர் சொல்கிறார்.
அடுத்ததாக, வாட்சப் குழுக்கள். ஒருவர் எப்படியும் 10 குழுக்களிலாவது உறுப்பினராக இருப்பார். குழுவுக்கு 100 நபர்களாவது உறுப்பினர்களாக இருப்பார்கள். அப்படி பார்த்தால், குறைந்தது 1000 நபர்களிடம் நமது பொருட்களை இலவசமாக சந்தைப்படுத்த முடியும். அதற்கு அடுத்ததாக, முகநூல் குழுக்கள். அதிலும் இருக்கும் பலதரப்பட்ட குழுக்களில் நமது பொருட்களை இலவசமாக சந்தைப் படுத்த முடியும்.
அப்படிதான் தனது சந்தையை உருவாக்கியதாக திரு. பரந்தாமன் சொல்கிறார். 500 பேர் கொண்ட நிலைத்த அளவிலான வாடிக்கையாளர்கள் இவருக்கு இப்போது இருக்கிறார்கள். மாதாமாதம் தனக்குத் தேவையான வருமானத்தை இந்த மதிப்பு கூட்டப்பெற்ற பொருட்களை விற்பதன் மூலம் பெறுவதாக சொல்கிறார். சிறிய அளவில்தான் தனது இந்த வணிகம் இருப்பதாக கூறும் இவர், தான் நிலம் வாங்கி இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தபின் இன்னமும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று உறுதியுடன் சொல்கிறார்.
தற்போது மூலப்பொருட்களை வெளியில் வாங்குவதால் ஏற்படும் செலவு, சொந்த உற்பத்தியின் மூலம் குறைந்து, பொருட்களின் விலையையும் குறைக்க முடியும் என்று அவர் சொல்கிறார். தரமான பொருட்களை, சரியான விலைக்குத் தருவதால், வாடிக்கையாளர்கள் மீண்டும், மீண்டும் வருவார்கள் என்று சொல்கிறார். தரமான பொருள் என்பதால் விலையை கூடச் சொன்னால், யாரும் வாங்க மாட்டார்கள்; அதே சமயம், குறைந்த விலையில் தருகிறேன் என்று சொல்லி, தரத்தைக் குறைத்தால் ஒரு முறைக்கு மேல் வாங்க மாட்டார்கள். இதை தாம் மிகவும் சிரமப்பட்டு தெரிந்து கொண்டதாக சொல்கிறார். எனவே, சரியான விலை நிர்ணயம் மிகவும் முக்கியம் என்று சொல்லும் இவர், புதுப்புது வாடிக்கையாளர்கள் இவருக்கு தற்போது அதிகரித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அடுத்து முக்கியமானதாக அவர் சொல்ல வருவது, நமது சந்தையை நாமே உருவாக்கிக்கொள்வது. சந்தைப்படுத்துதல் என்பது ஏதோ நமக்கு புரியாத ஒன்று அல்ல. நமக்கு அண்மையில் இருக்கும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்களே முதன்மை வாடிக்கையாளர்கள், அந்த சந்தையை உருவாக்கிக் கொள்வது மிகவும் முக்கியம். அண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் ஆகிய பகுதிகளில் கடை அமைத்து சந்தைப்படுத்தும் போது மிக எளிதில் மக்களிடம் நமது பொருட்கள் சென்று அடையும் என்று கூறுகிறார். திருவிழாக்களில் கடை வைத்துக் கொண்டு நிற்பதாவது என்று நினைப்பவர்களுக்கு இவர் சொல்லும் பதில், அம்பானி, அதானி போன்றவர்களே இன்று கீழே இறங்கி வந்து சந்தைப்படுத்துதலைச் செய்யும்போது நாம் யோசிக்கக் கூடாது என்பதுதான். திருவிழாவிற்கு வரும் மக்கள் புதிய புதிய பொருட்களை விரும்பி வாங்குவார்கள் என்பது இவரது துணிபு.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து புதிதாக இயற்கை விவசாயம் செய்ய வரும் நண்பர்களுக்கு இவர் கூறும் அறிவுரைகள்.
முதலாவதாக, செய்து கொண்டிருக்கும் வேலையை உடனே விட்டுவிட்டு விவசாயம் செய்கிறேன் என்று வராதீர்கள். ஏனென்றால், விவசாயம் என்பது ஒரு வாழ்வியல். மற்ற வணிகங்களைப் போன்றோ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வது போன்றோ விவசாயம் கிடையாது. எக்ஸெல் ஷீட்டில் வேலை செய்வது போல கிடையாது. விவசாயத்தில் அடி வாங்கினால் பெரிதாக இருக்கும். எக்ஸெல் ஷீட்டில் ஏதேனும் தவறு செய்தால் அழித்துக் கொள்ளலாம். விவசாயத்தில் அப்படி முடியாது.
எனவே இருக்கும் வேலையிலேயே தொடர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் தொடர்பான சிறுசிறு வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்.
விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல. அது ஒரு வாழ்வியல். வாழும் முறைகளை இயற்கையோடு இயைந்து இணைத்துக் கொள்வது. அதனால், எடுத்தவுடன் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றில்லாமல், ஒருங்கிணைந்த பண்ணையமாக விவசாயத்தை எடுத்துச் செல்ல வேண்டும். 5 ஏக்கர் அல்லது 10 ஏக்கருக்கு நெல்லோ, வாழையோ சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நினைத்தால், பெரும் நட்டத்தை சமாளிக்க வேண்டி வரலாம். எனவே, அனைத்தையும் ஒருங்கிணைத்த பண்ணையமாக அமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
நான் விசாரித்து அறிந்த வகையில், இது போன்ற ஒருங்கிணைந்த பண்ணையம் பயனுள்ளதாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
இரண்டாவதாக, உங்களது தயாரிப்புகளை நீங்களே விற்பனை செய்வது நல்லது. நாங்கள் ஆரம்பித்த வேளையில், நிறைய டீலர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், நாங்கள் எங்களது பொருட்களை நேரடி விற்பனை மட்டுமே செய்வது என்ற தெளிவான முடிவில் இருந்தோம். நமது வாடிக்கையாளர்கள், நம்மைச் சுற்றியே எப்போதும் இருக்கிறார்கள்.
மூன்றாவதாக, விவசாயம் இப்போது நிரந்தரமில்லாமல் இருக்கிறது. ஒரு வேளை மழை பெய்கிறது. மறுவேளை வறட்சி தாக்குகிறது. எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. எனவே, செய்யும் பயிரில் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று ஐயமில்லாமல் சொல்லிவிட முடியாது. இந்த சமயங்களில், இது போன்ற மதிப்பு கூட்டி செய்யும் சிறு சிறு பொருட்களின் விற்பனை நமக்கு கை கொடுக்கும். மதிப்பு கூட்டிய பொருட்களை நீண்ட காலம் பாதுகாக்க முடியும். நல்ல விலை வரும்போது விற்கலாம். விளைச்சலை நேரடியாக விற்பதற்கு பதிலாக, மதிப்பு கூட்டி விற்கும்போது அதிகபட்ச விலை கிடைக்கிறது. ஆதாரமான விவசாயத்தில் தோல்வி ஏற்பதும்போது நமது மற்ற முயற்சிகள் நம்மை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றும்.
தைரியமாக, நமது அடுத்த அடியை தலை நிமிர்ந்து கம்பீரமாக எடுத்து வைக்க ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பொருட்களை மதிப்புக்கூட்டி நேரடியாக சந்தைப்படுத்துதல் ஆகியவை உதவும்.
விவசாய நண்பர்களுக்கு இவரது ஆலோசனை என்னவென்றால்,
“விவசாயிகள் இது போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களைத் தயாரித்தல், அவற்றை நேரடி விற்பனை மூலம் வாடிக்கையாளர்களை உருவாக்கி விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஒதுக்க நேரமில்லை என்று விலகிச் செல்லாமல் இதில் ஆர்வமும், உழைப்பும் செலுத்தினால் வெற்றி பெற முடியும். நமது பொருட்களுக்கு நாமேதான் முதலாளிகள்; அவற்றின் விலையை நாமேதான் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களை அதற்கு அனுமதிக்கக் கூடாது. விளைபொருட்கள் நம்முடையவை, தயாரித்த பொருட்கள் நமது எண்ணும்போது அவற்றின் மூலம் கிட்டும் இலாபமும் நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்”.
இவர் தற்போது பாரதி ஹோம்மேடு அப்ளைட் ப்ரொடக்ட்ஸ் என்ற பெயரில்
- 35 வகை மூலிகைகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குளியல் பொடி,
- 25 மூலிகைகள் கொண்ட சிகைக்காய் பொடி,
- 8 வகையான மூலிகைகள் கொண்ட பற்பொடி இவற்றுடன்
- கைகளால் செய்யப்பட்ட 14 வகையான சோப்புகளையும் தயாரிக்கின்றார்.
Comments
Post a Comment