பல்லடுக்குப் பயிர் சாகுபடி – காய்கறி , பழங்கள் ,கால்நடை, இடுபொருட்கள்

ஆகாஷ் சௌராசியா. மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியில் இருக்கும் பண்டல்கண்ட்-ஐ  சேர்ந்த சிறு விவசாயி. வறட்சிக்குப் பெயர் போன இந்த இடத்தில் தனக்கிருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தில் தனது புதுமையான, எளிமையான வழிகளின் மூலம் வருடத்திற்கு 15 இலட்சங்கள் வரை வருமானம் ஈட்டுகிறார் இந்த இளம் விவசாயி.  இவரது இடத்தில் பல்லடுக்கு  முறையில் விவசாயம் நடக்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் மூங்கிலையும், காட்டுப்புற்களையும் கொண்டு பயிர்களுக்கு மறைவாக பந்தல் அமைத்ததன் மூலம் பெரும் பொருட் செலவு பிடிக்கும் பசுமைக் குடில் அமைப்பை  இவர் தவிர்த்திருக்கிறார். ஆனால், இவரது பயிர்கள் சூரிய வெப்பத்திலிருந்தும், கடும் பனிப்பொழிவுகளில் இருந்தும் இந்த மூங்கில் மற்றும் காட்டுப்புல் பந்தலின் உதவியுடன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்கின்றன.

வருடம் முழுவதும் வருமானம் வருவதற்கு இவர் கடைபிடித்து வரும் வழிகள் மிக எளிமையானவை. மிகவும் பலனளிக்கக் கூடியவையும் கூட.

இவர் பிப்ருவரி மாதத்தில் தனது நிலத்தில் பூமிக்கு அடியில் இஞ்சியை நடுகிறார். அதன் மேலே முளைக்கீரை போன்ற ஒரு கீரை வகையை விதைக்கிறார். அதன் பின்னர், கோவைக்காய் போன்ற கொடி வகையை மூங்கில்களில் படர விடுகிறார். பின்னர், 12 அடிக்கு 18 அடி இடைவெளியில் பப்பாளி மரம் வளர்க்கிறார்.

ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நான்கு வகையான பயிர்களை அவர் தெரிவு செய்து பல்லடுக்கு முறையில் பயிர் செய்கிறார். மேலே பந்தலில் காட்டுப்புற்களின் இடைவெளியில் வரும் சூரிய ஒளி அத்தனை பயிர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. வெந்தயம், பசலை, கொத்தமல்லி போன்றவற்றையும் இத்துடன் சேர்த்துக் கொள்கிறார்.

இதன் நன்மையாக, இரண்டு மூன்று வாரங்களில் பயிர்கள் வளர்ந்து பூமியை மூடிக்கொள்வதால் களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. களை எடுக்கும் செலவு மிச்சமாகிறது.

இரண்டாவதாக, களைகளைத் தின்று பயிர்களை நாசமாக்கும் பூச்சிகள் கட்டுப் படுத்தப்படுகின்றன.

மூன்றாவதாக, கீரைகளை அறுக்காமல் வேரோடு பிடுங்கி மண்ணைத் தட்டி விடுவதால், மேல் மண்ணில் இயற்கையாக துளைகள் ஏற்பட்டு இஞ்சிக்கு தேவையான காற்றோட்டமும் கிடக்கிறது.

அந்த கீரைகள் தினசரி வருமானத்திற்கு உதவியாகவும் இருக்கின்றன.

மார்ச் மாதத்திலிருந்து ஜூலை  மாதம் வரை கீரைகள் நல்ல வருவாயைத் தருகின்றன. ஏப்ரல் மாதத்திலிருந்து கோவைக்காய் விற்பனைக்கு வந்து விடும். நவம்பர் மாதம் வரை அவையும் வருமானம் ஈட்டித்தரும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து இஞ்சி அறுவடைக்கு கிடைக்கும். இதற்கு நடுவில் பந்தலை தாண்டி வளரும் பப்பாளி காய்க்கத் தொடங்கும். டிசம்பர், ஜனவரிகளில் பப்பாளி கிடைக்க ஆரம்பித்துவிடும். எனவே, மார்ச் மாதத்தில்  ஆரம்பித்து அடுத்த வருடம் பிப்ருவரி வரை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இவரது அமைப்பின் நன்மைகள்:

  1. இயற்கையான முறையில் அமைக்கப்படும் மூங்கில் மற்றும் புற்களால் ஆன பந்தல் கடும் கோடையையும், கடும் பனிப்பொழிவையும் தாங்கி பயிர்கள் வளர உதவுகின்றன. அவை 5 வருடங்கள் நீடித்து உழைக்கக் கூடியவை. எனவே, 1.5 இலட்சங்கள் செலவு செய்தாலும் வருடத்திற்கு வெறும் 30000/- ரூபாய் செலவே ஆகிறது.
  2. நாட்டு ரக விதைகளையே இவர் பயன்படுத்துகிறார். இதன் மூலம் விதைக்கான செலவு குறைகிறது. மேலும், இந்த விதைகள் பூச்சிகள் மற்றும் நோய்த்தாக்குதல்களில் இருந்து இயற்கையாகவே தற்காத்துக் கொள்ளும் தகைமை பெற்றுள்ளன. விளைச்சலும் நன்றாக இருப்பதுடன், நீண்ட காலம் நீடித்து இருக்கின்றன.
  3. பண்டல்கண்ட் போன்ற வறண்ட நிலப்பகுதிகளில் கிடைக்கும் சொற்ப நீராதாரம் கொண்டு அதிக விளைச்சளைப் பெற முடிகிறது. ஒரு பயிருக்கு என்று இல்லாமல் எல்லா பயிர்களும் நீரைப் பங்கிட்டுக் கொள்வதால், நீர்த் தேவை மிகவும் குறைவு.
  4. பூச்சித்தாக்குதல்களில் இருந்து எளிதாக தற்காத்துக் கொள்ள முடிகிறது. இவர், நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அட்டைகளை (அவை பூக்களின் நிறங்களை பிரதிபலிப்பவை) ஆங்காங்கே கம்பங்களில் மாட்டி வைத்து அவற்றின் மேலே கடுகெண்ணெய் மற்றும் வெல்லம் இரண்டையும் தடவி விடுகிறார். பறக்கும் பூச்சிகள் இவற்றில் ஒட்டிக் கொண்டு அழிந்து போகின்றன.

இவரது அனுபவத்தில், இவரது நிலத்தில் கிடைக்கும் வருமானம் (ஒரு ஏக்கருக்கு) கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  1. கீரை விற்பனை                      : 1,00,000.00 (20,000 கிலோ )
  2. கோவைக்காய் விற்பனை : 1,50,000.00 (25,000 கிலோ )
  3. பப்பாளி பழ விற்பனை        : 1,00,000.00 (8,000 கிலோ )
  4. இஞ்சி விற்பனை                    : 3,00,000.00 (6,000 கிலோ )

மொத்தம்                                               : 6,50,000.00

செலவு                                                    : 50,000.00

வருமானம்                                          : 6,00,000.00

இரண்டரை ஏக்கரில் சுலபமாக 12 இலட்சங்கள் வருமானம் ஈட்டுகிறார்.

அல்லாமல், வெர்மிகம்போஸ்ட் உரம் தயாரித்து விற்பதால் அவருக்கும் 1.5 முதல் 1.75 இலட்சம் ரூபாய் வரை வருமானம் கிடக்கிறது. பால் விற்பனையிலும் வருமானம் கிடைக்கிறது.

இவர் தனது நிலத்தில் மாதமிரு முறை தன்னை நாடி  வருபவர்களுக்கு தனது முறைகளைச் சொல்லியும் கொடுக்கிறார். இது வரை 50,000 விவசாயிகளுக்கு மேல் இவரிடம் கற்றுக் கொண்டு பயனடைத்துள்ளனர்.

மேலும் 12-15 விதமான காய்கறிகளை இது போன்ற நான்கு அடுக்கு முறையில் மாற்றி மாற்றி பயிரிட முடியும் என்று இவர் சொல்கிறார்.

இந்தியா முழுக்க 80 சதவிகிதம் விவசாயிகள் 5 ஏக்கருக்கும் குறைவான நிலப் பரப்பையே வைத்திருப்பதால், இவரது அணுகுமுறை சிறு குறு விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நன்றி: டவுன் டு எர்த்

தமிழ் மொழியாக்கம் –  நாகராஜ், சென்னை


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை