மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில்

மா முக்கனிகளில் ஒன்று

uyirnaadi-maa-0001மா மரங்களில் பூக்கள் பராமரிப்பு

மா மரங்களில் பூக்களை பூக்க வைப்பதற்கு மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் காப்பது சற்று கடினமான காரியம். சாதாரணமாக மா மரங்கள் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதி வரை பூக்கின்றன முதலில் பூக்க ஆரம்பிப்பது செந்தூரா ரகம் கடைசியில் பூப்பது நீலம் ரகம்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தூரா அடுத்து ,இமாம் பசந்த்,ரஸால்,அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா ஆகியவை பூக்கும்.

மாம்பூக்களில் இயற்கையாகவே உதிராமல்  இருந்தால் 1% தான் நிற்கும், பிரச்சினை இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும் . நமக்கு மகசூலும் குறையும்.

அல்போன்சா, இமாம்பசந்த்,பங்கனபள்ளி போன்ற ரகங்களில் 1% விட குறைவாகத்தான் பிஞ்சுகளாகும்

இரண்டாவது இயற்கையாகவே மரங்கள் பழங்களை தாங்கும் அளவுக்கு தான் காய்கள் நிற்கும். மாம் பூக்களை அதிகம் தாக்குவது தத்துப்பூச்சிகள் மற்றும் சூட்டிமோல்ட் என்ற சாம்பல் நோய்.

கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும், அரப்பு மோர் கரைசல் மற்றும் தேங்காய் பால் மோர் கரைசல் மாம்பூக்களின் மேல் தெளித்தால் அதிக பூக்கள்  பிஞ்சுகளாகும்.

பூக்கள் ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் மேம்படுத்தப்பட ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தண்ணீரில் கலந்து விடுவதால் பழங்களின் அளவு மற்றும் சுவை அதிகமாக இருக்கும்

மாமரங்கள் பூ எடுத்து கோலி அளவு வந்த பின்புதான் தண்ணீர் பாய்சவேண்டும். நன்றி ஸ்ரீதர் சென்னை.

 

தொடர்ந்து மற்றுமொரு விவசாயின் பகிர்வு 

மா ரகங்கள்

இமாம்பசந்த், அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி,  மல்கோவா, பெங்களூரா மற்றும்  காலப்பாடி ( இந்த ரகம் நான் கேள்விப்பட்டதில்லை கன்று எடுக்கும் போது சொன்னார் நல்லா இருக்கும்னு காய்த்த பின் தெரியும் ) , இது போன்று பல்வேறு ரகங்களை நடவு செய்வதால், ஆண்டு முழுவதும்  நமக்கு அறுவடை இருக்கும். நீளம் ஏற்கனவே இருப்பதால் அதை நடவு செய்யவில்லை. மேற் கூறிய இந்த ரகங்கள் தான் தஞ்சை மருங்குள அரசு நர்சரியில் கிடைத்தது.

 

நடவு மூன்று வகையாக பிரிக்கலாம்

சாதரண நடவு, இடைவெளி  30க்கு*30 அடி

அடர் நடவு, இடைவெளி  15க்கு*15 அடி

உயர் அடர் நடவு, இடைவெளி 9க்கு*6 அடி

பொதுவா மூன்றுக்கு மூன்று அடி என்ற முறையில்  நீள அகல ஆழத்திற்கு குழி எடுத்துக் கொள்ள சொல்வார்கள் நான் செய்தது 1*1க்கு அடி குழி தான் எடுத்தேன் கன்று வைக்கும் அளவுக்கு, தென்னைக்கு கூட அப்படி தான், பாலேக்கர் அய்யாவும் அதை தான் கூறிவருகிறார். மா கன்றை பீஜாமிர்தத்தில் சற்று மூழ்கி ( கவனம் தாய் மண் கரைந்திடாமல் ) குழியில் வைத்து கனஜீவாமிர்தம் மற்றும் மேல் மண் கலந்து குழியை மூடினேன், கன்று நடும் போது துணைக்கு குச்சி வைத்து கன்றோடு கட்டிவிடவும் காற்று அதிகமாக வீசும் போது கன்று சாய்ந்து விடாமல் இருக்க , மறக்காமல் கன்று வளர வளர துணை குச்சியின் கட்டு தளர்த்து கட்ட வேண்டும் காய்த்ததும் துணை குச்சியை அகற்றி விடலாம்.

அடர் நடவு என்பதால் நான் விட்ட இடைவெளி 12*12க்கு அடி,  9*6க்கு நடலாம் தோட்டக்கலை துறையினர் மூலம் சொட்டுநீர் போட்டதால் இடைவெளி மாறுபட மாறுபட மானிய தொகை மாறுபடும், அதாவது  இடைவெளி குறைய குறைய மானிய தொகையும் குறையும்.

வாங்கி வந்த கன்றுகளை உடனே நடவு செய்து விடாமல்.. நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பையில் இட்டு, தோட்டத்தில் வழக்கமாக பாசனத்திற்குப் பயன்படுத்தும் அதே நீரைத் தெளித்து நிழலில் வைத்திருந்து, புதிய தளிர்கள் வரும் வரை காத்திருந்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கன்றுகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். ஆனால் எனக்கு நேரமின்மையின் காரணமாக உடனே நடவு செய்ய வேண்டி இருந்தது அதனால் சில கன்றுகளும் இறந்து விட்டன. தோட்டக்கலை துரையினர் மூலம் கன்றுகள் பெற்றதால் இழப்பு கன்றுகளுக்கு மறு வருடத்தில் தருவதாக கூறினார்கள், வாக்குறுதியோடு சரி, பல முறை கேட்டு பார்த்தும் கொடுத்தபாடில்லை.

 

பட்டம்

ஆடி, ஆவணி முதல் மார்கழி மாதம் வரை நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு ஒட்டுக்கன்றுகளைத் தேர்வு செய்வது நட்டால் மூன்றிலிருந்து  நான்காண்டுக்குள் மகசூலுக்கு வரும்

 

நீர்

மா மரத்திற்கு நீர்த் தேவை குறைவு என்ற போதும் இளங்கன்றுகளாக இருக்கும் போது ஈரப்பதம் குறையாமல் கொடுத்துவர வேண்டும்.

 

ஊடு பயிர்

மா மரத்தில் ஊடுபயிராக 2 ஆண்டுகள்  நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம். இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அறுவடை செய்ததும் அதன் செடிகளையே மாவுக்கு  மூடாக்காகப் பயன் படுத்திடலாம். அல்லது மண்ணை வளப்படுத்த பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதிடலாம்.

 

இயற்கை உரம்

மா  நடவு செய்த முதல் ஆண்டு  மண்புழு உரம், கம்போஸ்ட் [ ஊற்றமேற்றிய ] தொழுவுரம்  உரக்கலவையை மரத்துக்கு ஒரு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை  இரண்டு கிலோவும் மூன்றாம் ஆண்டில் அடிப்பகுதியில் இருந்து ஒன்றரை அடி தள்ளி  சிறிது  குழியெடுத்து மூன்று கிலோ மேற் கூறிய  உரக்கலவையினை போட்டு அதோடு மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.  ஒவ்வொரு முறையும் உரம் வைக்கும் போது இது போன்றே மேல் மண்ணைப் போட்டு மூட வேண்டும், உரம் வைக்கும் போது ஈரப்பதம் அவசியம் இருக்க வேண்டும், தண்ணீரும் பாய்ச்சனும்.

மண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் மூன்று  ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். மாதந்தோறும் ஜீவாமிர்தம் / பஞ்சகவ்யம் தெளித்து வரவும்.

கவனிக்க – மேற் கூறியவை உரமிடுமுறை பொதுவானவை,

உதாரணம் :-

இரண்டு இட்லி சாப்பிடும் நபருக்கு 10 இட்லியும், 10 இட்லி சாப்பிடும் நபருக்கு இரண்டு இட்லியும் கொடுப்பது போன்றது தான் ஆக உங்கள் மண்ணிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து உரமிடுவது சால சிறந்தது.

 

மூடாக்கு

uyirnaadi-maa-001தோட்டத்தில் உள்ள புல், களைச் செடிகளைக் களைத்து செடிகளைச் சுற்றி மூடாக்கு போட்டுக் கொள்ளலாம். நான் தேங்காய் உரித்த மட்டைகளை மூடாக்காக போடா சொல்லி இருந்தேன் அவர்கள் ஏனோ தானோ என்று போட்டு சில கன்றுகளில் செதில் பூச்சி வந்துவிட்டது. சரியாக மூடாக்கு போடாவிட்டால் இது போன்று வருமென்று சூர்யா நர்மதா சொன்னார்கள்,   தேங்காய் மட்டையின் வழுக்கை வானத்தை பார்த்தவாறு இருக்கனும்னு மாது சொன்னார், இது மூடாக்குப் போல் இல்லை அள்ளிக் கொட்டியது போல் உள்ளது மட்டையை கவிழ்த்து சிறிது மண்ணுக்குள் புதைத்த மாதிரிதானே வைப்பார்கள் என்று தேன்மொழி கேள்வி கேட்டாங்க. வேலை ஆட்களுக்கு மூடாக்கு பற்றி தெரியாததால் இவ்வாறு செய்துவிட்டனர் என்று கூறினேன், நண்பர்கள் கூறிய அறிவுரை ஏற்று  பிறகு  தேங்காய் மட்டையை சரி செய்து போடபட்டது.  கார்த்தி அவர்கள் சொட்டு நீர் இது போன்று மட்டையின் மீது இருந்தால் மட்டையே நீரை தேக்கி வைத்து கொள்ளும் நிலத்தில் இறங்காதே என்று கேள்வி எழுப்பினார், முன்பு சொட்டு நீர் குழாயின் மீது தான் மூடாக்கு போடா பட்டது நாளாக நாளாக மூடாக்கு மக்கி சொட்டுவானில் அடைத்து கொண்டு தண்ணீர் வர தடை பட்டதால் இம் முறை சொட்டு நீர் குழாயை மூடாக்கு மேல் போட்டு சொட்டுவானிலிருந்து நீர் நிலத்தில் இறங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

கவாத்து

uyirnaadi-maa-003கவாத்து ஏன்,

நான்கு பேர் சாப்பிடும் உணவை பத்து பேருக்கு
பகிர்ந்தால் உணவு சரியாக எடுத்து கொள்ளலாமல் போகலாம், அது போல மரம் முழுவதும் இலைகளும் கிளைகளும் இருந்தால் நடு தண்டில் சூரிய ஒளி படமால் அதற்குண்டான உணவை எடுத்து கொள்ள முடியாமல் போக வாய்ப்பிருப்பதால் கவாத்து செய்யப்படுகிறது, சிலர் இயற்கைக்கு முரணான செயல் என்பதால் செய்வதில்லை இது அவரவர் விருப்பம், ஆனால் நீங்கள் அடர் நடவு முறை மேற்கொண்டால் அவசியம் கவாத்து செய்து தான் ஆக வேண்டும். கவாத்து செய்த படங்கள்.

 

எவ்வாறு செய்வது

uyirnaadi-maa-002

இரண்டு வருடங்கள் வரை பக்க கிளைகளை கழிக்கனும் அப்போது தான் மரத்தின் தண்டு தடிமனாகவும் காய்த்த பின் மரம் சாய்ந்திடாமலும் இருக்கும். வளர்ந்த மரங்களாக இருப்பின்  அடிமரத்தில் இருந்து மேல் நோக்கிப் பார்த்து வெயில்படாத குச்சிகள், உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். வெயில் நன்கு கிடைக்கக் கூடிய கிளைகளை வெட்டக் கூடாது.
பெரிய கிளைகளை அகற்றும் போது காயம் பெரியதாக ஏற்படும் ஆக அதற்குரிய சாதனங்கள்  வைத்து கவாத்து செய்ய வேண்டும் . மரத்தில் காயம் ஏற்பட்டால்  தண்டு துளைப்பான், பட்டைத் துளைப்பான் மற்றும் பல தீமை செய்யும் பூசனங்கள் ஊடுறுவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியை சாணக் கலவை கொண்டு பூசுவது சிறந்தது, காயம் இருந்தால் தான் செய்யணும்னு இல்லை,  கவாத்து செய்ததும் கழித்த கிளைகளின் பாகத்தில் சாணக் கரைசலை தடவிட வேண்டும்.

 

பூ

ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை  நீக்கிவிட வேண்டும். 2 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளி விடவேண்டும். 3ம் ஆண்டு பூ வைத்த உடன் செறிவூட்ட பட்ட  தேமோர்க்கரைசல் தெளிப்பதால் பூக்கள் உதிர்வது குறைந்து பிஞ்சாக மாறி காய்பிடிக்கும்.

 

காய் வைத்ததும்

காய்க்க ஆரம்பித்த பிறகு, காயோட வளர்ச்சிக்காக ஒரு முறை இயற்கை வளர்ச்சி ஊக்கி தெளிக்கனும். நன்றாக விளைந்த காய்களை அதாவது மாம்பழத்தோட காம்பு தளர்ச்சி அடைந்து பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறி இருந்தால் மட்டுமே அறுவடை செய்யவும். இந்த அறிகுறி, மா பழுக்க ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். சிலர் 50% முத்தினதும் பறித்துவிடுவாங்க. இது தப்பான விஷயம். காய்களை அடிபடாமல் பறிக்கணும் என்பதும் முக்கியம். மாங்காயின் காம்பை 10 செ.மீ ல் இருந்து 20 செ.மீ வரை விட்டு அறுவடை செய்யும் கருவியான கத்திரிக்கோலால் கட் செய்ய வேண்டும். இதனால் மாங்காயின் பால் அதன் தோல் மீது விழாமல் பாதுகாக்கப்படும்.  பால் தோல் மீது படும் இடம் கரும் புள்ளியாக மாறிப் பழம் கெட்டு விடும். அப்போதுதான் அது நல்லபடியாக பழுத்து வரும். அடர் நடவு முறையில் சாகுபடி செய்தால் நின்று கொண்டு எளிதாக பறித்து விடலாம்.

 

பழ ஈ கட்டுப்படுத்த

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை  பழ ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். பழ ஈக்கள் மஞ்சள் நிறத்தில், வீட்டு ஈக்களை போன்று காணப்படும். அவை முதிர்ந்த காய்களை துளைத்து 2 முதல் 15 முட்டைகளை இடுகின்றன. பின்னர் அந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவந்தவுடன் பழத்தை துளைத்து அழுகச் செய்கின்றன. இதனால் பழம் அழுகி மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகின்றன. இவற்றை கட்டு படுத்த  காயின் வளர்சிக்கு தெளிக்கும் வளர்ச்சி ஊக்கிக்கு பிறகு மூலிகை பூச்சி விரட்டியும் தெளிப்பது சிறப்பு. இயற்கை வழி விவசாயத்தில் வரும் முன் காப்போம் என்பதற்கினங்க அவ்வப்போது மூலிகை பூச்சி விரட்டி தெளித்து வரவும்.

ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகளான எருக்கண் செடி, பப்பாளிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடு திண்ணா இலை, இலையை கசக்கினால் ஒவ்வாத வாடை வரும் இலைகள், ஆல இலை, வேம்பு, நொச்சி, ஆடாதோடை, ஆடு தீண்டா பாலை,  ஊமத்தை, கும்பை, துளசி, சீதா, கிளறிசெடியா இவைகளில் ஏதேனும் ஐந்து செடிகளை சம அளவில் இரண்டு கிலோ எடுக்க வேண்டும். ஐந்து லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊர வைத்து, இரண்டு வாரம் கழித்து வடிகட்டி பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மூலிகை கரைசலை கலந்து தெளிக்கலாம். இதை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்தால், பழ ஈக்கள் கட்டுப்பட்டும்.

ஒரு ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப் பொறிகள் வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழித்தும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

 

பழுக்க வைக்க

ஆவாரம் பூக்களையும், இலைகளையும் மாம்பழத்தோடு போட்டு வைத்தால் பழங்கள் சீக்கிரமாக பழுப்பது மட்டும் இன்றி, தங்க நிறத்திலும் நல்ல வாசனை உடனும் இருக்கும்.

இணையம் மூலம் நான் கற்ற மற்றும் நான் செய்து வரும் விஷயங்களை இங்கு கூறியுள்ளேன். நன்றி, பாட்சா – தஞ்சாவூர்.

 

மற்றுமொரு விவசாயின் பகிர்வு ,   மா  பருவநிலை மாற்றமும் மாற்று வழிகளும்.

தமிழகத்தைப் பொறுத்தவகையில் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் பூ பூக்க வேண்டும். இப்பூ பூக்க தகுந்த நுண்ணிய தட்ப வெப்பநிலை நிலவ வேண்டும்.

அக்டோபர் மாதம் முதல் பருவ மழை பெய்து பகல் வெட்பநிலை 25 டிகிரியும் இரவு வெட்பநிலை 20 டிகிரியாகக் குறைந்த நிலையில் பூ பூப்பது அதிகரிக்கும். நிலத்தடிநீர் உயர்ந்தும் நிலத்தின் கீழ் ஈரப்பதம் அதிகரித்த நிலையும் இருக்கும்.

இந்தவருடம் பருவழை இல்லை நிலத்தடிநீர் மற்றும் ஈரப்பதம் குறைவு. ஆனால் பூக்க வேண்டிய மாதத்தில் பூ பூக்க கீழ்கண்ட இரண்டு முறைகளை செயல்படுத்தலாம்.

  1. தற்போதைய கிணறு மற்றும் போரில் உள்ள நிலத்தடி நீர் அளவைப் பொறுத்து அனைத்து மரங்களுக்கும் சரிசமமான அளவில் பாசனநீர் வாரத்தில் இரு முறை கிடைக்கும் வகையில் பிரித்துக் கொடுக்கலாம்.

உத்தேசமாக ஒவ்வொரு பாசனத்தின் போதும் ஒரு மரத்திற்கு 35-55லிட் நீர் களிமண் பகுதிகளிலும் ,50-70லிட் செம்மண் நிலங்களிலும் கிடைக்க வகை செய்யலாம்.

 

சொட்டுநீர் பாசனம் சிறந்தது.

மரத்தின் தூரிலிருந்து 5-6 அடி தூரத்தில் 2*2*2 அடி அளவுள்ள குழி எடுத்து அக்குழிக்குள் சொட்டுநீர் பாசன நீர் விழ ஏற்பாடு செய்யலாம்.

சொட்டுநீர் பாசனம் வழியாகக் கூட அனுப்ப முடியாத அளவு நீர் குறைந்திருந்தால் ஏக்கருக்கு ஒன்று என்ற வீதத்தில் 200லீட் பிளாஸ்டிக் டிரம் வைத்து அதற்கு சுருட்டி வைக்கும் அமைப்பிலான பிளாஸ்டிக் பைப் முலம் நிரைத்து குடத்தின் மூலம் உயிர் பாசனம் தரலாம்.

 

மரம் பூக்க பாசனம் முக்கியம்

  1. வறட்சியான இத்தருணத்தில் இ.எம் கரைசலை 200 லிட் டிரம்மிற்கு 500 மி.லிட் என்றளவில் கலந்து மா மரத்தின் உச்சியிலிருந்து இலை நனையும் வகையில் மாலை வேளையில் தெளிக்கலாம். 10 நாட்களுக்கொரு முறை என இரு முறை தெளித்தால் பூ பூப்பது தூண்டப்படும். 3 வருடத்திற்கு மேல் உள்ள அனைத்து வயது மரங்களிலும் தெளிக்கலாம்.

எளிய முறையில் குறைந்த செலவில் ஆரோக்கியமான  விவசாயம் செய்து வெற்றி கான வரும்காலம் களில் முயற்சி செய்வோம்.

செய்முறை குறித்த மேலும் விபரங்களுக்கு அணுகவும், பிரிட்டோராஜ் 99444 50552


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை