வினைத் திறம் மிக்க பயிர் சுழற்சி முறை

பிரேம்சிங் – உழவர் – உத்தரப் பிரதேசத்திற்ம், மத்தியப் பிரதேசத்திற்கும் இடையில் பூந்தேல்கந்த்தில் சுமார் 12.8 ஏக்கர் தரிசு நிலம்; வங்கிகளில் எந்தவிதமான கடனும் இல்லாத, ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ. 20 லட்சம் வருமானம் தன் நிலம் வழியாகவே பெறுபவர் – நம்ப முடிகிறதா…?
நம்பித்தான் ஆக வேண்டும். பசுமையான,நிலையான, தற்சார்பு தன்நிறைவு பற்றிய ஒரு தெளிவான ஓவியம் பிரேம் சிங்கின் உழவு நிலம் என்றால், அது மிகையாகாது.
கடும்வறட்சி, சராசரிக்கும் குறைவான மழை அளவு, தொடர் பயிர் சேதங்கள், உழவில் ஏற்பட்ட இழப்பால் வறுமை, வேலை இன்மை, தற்கொலைகள் எனும் சொற்களுக்கு பழக்கப்பட்டமலைப்பாங்கான பகுதியில் அமைந்த தன் நிலத்தை …
இயற்கை உற்பத்திப் பொருட்கள், தன் உற்பத்தி உரங்கள்., தேவையான நீர் நிலைகளுடன் கூடிய கால்நடை வளர்ப்பு, நன்கு வளமூட்டப்பட்ட மண், சுய உற்பத்தி அங்கக உரங்கள்,பழங்கள் நிறைந்த மரங்கள்,மிக முக்கியமாக வருவாயின் தொடர் ஆதாரம் கொண்ட தன்னிறைவு தற்சார்பு நிலத்திற்கு ஒப்பற்ற உதாரணமாக பிரேம்சிங் உருவாக்கியுள்ளதால், இது சாத்தியமாயிற்று.

வேர்களைத் தேடி…
சாதாரண உழவுக் குடும்பத்தில் பிறந்த 54 வயது பிரேம்சிங், வயல்வெளிகள்,நீர்நிலைகள்,கால்நடைகளுடன் வளர்ந்தார். தத்துவவியலில் முதுகலைப் பட்டத்தவரும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை பணியாளருமான பிரேம்சிங், தன் முன்னோர் குலத்தொழிலான உழவுத் தொழிலில் 1987ல் இறங்கினார். தீவிர பசுமைப் புரட்சியின் காலம் அது. அதன் விளைவால், யூரியா, இரசாயனம். பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தி டிராக்டர் விவசாயமே முதலில் செய்தார்; எல்லோரையும் போல, இந்த இரசாயன விவசாயம் மகசூலைப் பெருக்கி தம் வாழ்வை வளமாக்கும் என்ற நம்பிக்கையுடன்.

மாறாக, நன்கு உழைத்து, ஒரு பருவத்திற்கு 2.25 இலட்சம்வரை நிலத்தில் வருமானம் பார்த்தும், குறையாத வங்கிக் கடனாலும், உயர்ந்து வந்த வட்டியாலும் வருமானத்தில் 80% மாதந்தோறும் வங்கிக்கே சென்றது. மீதித் தொகையில் நான்கு அண்ணன் தம்பிகள் உள்ள குடும்பத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.

இரண்டு ஆண்டுகள் இவ்வாறே உழன்ற பின், இந்த துயரத்தின் காரணம் தெரிந்தது. உழவர்கள் கட்டாயப்பரிந்துரையால் பசுமைப்புரட்சியின்பால் கவரப்பட்டு, உழைப்பின் பலனனைத்தும், இரசாயன உரங்கள், வேளாண் கருவிகள், டிராக்டர் போன்றவற்றின்விற்பனைக்காகவே அடமானம் வைக்கப் படுகிறது என்பது புரிந்தது.

“டிராக்டருக்காகவும், உழவுக் கருவிகளுக்காகவும் அடமானத்திற்கு சென்ற என் தாயின் நகைகளை கடன் மென்று தின்றுவிட்டது.
கடன் விவசாயிகளின் பெரும் வலி. 2017ல் மட்டும் நாம் பல கோரிக்கைகளை முன்வைத்து போராடினோம். அதில் முக்கியமான ஒன்று விவசாயிகளின் கடன் தள்ளுபடிதானே”
.

அதோடு செயற்கை உரங்களும் இரசாயனங்களும் மண்ணை மலடாக்கியதொடு, சூழலையும் பாதிக்கிறது என்று புரிந்தது.

இதன் பின்னர் பிரேம், தங்கள் நிலத்தில் ஒரு சிறு பகுதியில் பாரம்பரிய தற்சார்பு உழவு செய்து பார்க்க விரும்பி,1989ல் தன் தந்தையிடம் அனுமதி வாங்கினார்.

வினைத் திறம் மிக்க பயிர் சுழற்சி முறை( smartcyclic agricultural process)

தற்சார்பு உழவை சரியாக செய்தாலே போதும். நாம் பிரச்சனையே இல்லா சுதந்திர வாழ்வு வாழலாம் என்று சொல்லும் பிரேம்,வினைத் திறம் மிக்கபயிர் சுழற்சி முறை யைப் ( smart cyclic agricultural process)பரிந்துரைக்கிறார். அதாவது முதலில் நம் குடும்பத்திற்கு மட்டும் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்வது. விற்பனையை முற்றிலும் தவிர்ப்பது. இயற்கை நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தாராளமாகவே கொடுத்து இருக்கிறது. அந்த மதிப்பை உணர்ந்து இயற்கையை மேலும் சுரண்டாமல் இருப்பது என்று விளக்குகிறார்.

இம்முறையில் நிலத்தை மூன்றாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

• முதலாவது பயிர்கள், காய்கள், பழங்களுக்கான பகுதி.
• இரண்டாவது கால்நடை வளர்ப்பிற்கான பகுதி
• மூன்றாவது மரப் பயிர்களுக்கான பகுதி.

இப்பகுப்பு முறை,பயிர் சுழற்சி, இயற்கை வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் (எ.கா ஊறுகாய்), மண் வளத்தை மேம்படுத்துதல், விதை உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்துதலையும் உள்ளடக்கியது.

இதில் கால்நடை வளர்ப்பு ஒன்றே பால் பொருட்கள்(பனீர், வெண்ணெய்), இயற்கை இடுபொருட்கள், மண்வளம், நல்ல மகசூlல் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பயன்களைத் தரும்..

காய்கள்,பழங்கள்,எண்ணெய் வித்துக்கள், பருப்பு, பயறு, தானிய வகைகள், நீர் – இவையே முதல் பகுதி பயிர்கள். இந்த உற்பத்தியில் வீட்டுத் தேவை போக மிகுதியை விற்கலாம். இதனால்வீட்டுத் தேவை,வெளி விநியோகத்தில் குழப்பம் வராது.

இந்த தற்சார்பும் எல்லைக்கு உட்பட்டது. பெரும்பாலானவை இருந்தாலும் சிலவற்றை வெளியிலிருந்து கொண்டு வந்தே ஆக வேண்டி உள்ளது. அப்படி வெளியில் இருந்து வாங்க வேண்டியவற்றையும் அருகில் உள்ள உழவரிடமிருந்தோ, அருகமை பகுதியில் இருந்தோ வாங்குவது, ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும்.

இந்த தற்சார்பு முறையே பிரேம்சிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 28% விவசாயிகளாலும், பெல்ஜியம், பிரான்ஸ்ஸில் உள்ள விவசாயக் குழுக்களாலும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

“எல்லா உழவர்களையும் போல நானும் பயிர் செய்வதில் தோல்வி, பருவநிலை சவால்கள், வங்கிக் கடன் உயர்வு என்ற புரட்டிப்போடும் பிரச்சனைகளில் சிக்குண்டு தவித்தேன்..அப்பத்தான் நம்ம முன்னோர்களையும் அவர்கள் பின்பற்றிய பழங்கால விவசாய முறைகள் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். அந்த வழிமுறைதான் இப்பிரச்சனைகள் எல்லாத்துக்கும் தீர்வுன்னு முடிவு செய்தேன்.இந்த என் முடிவு முதலில் பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் குடும்பத்தில் கூட என்னை புரிந்து கொண்டு ஆதரிக்க யாருமில்லை. ஆனால் இன்று. நான் கடனே இல்லாத பணக்கார விவசாயி,”என்கிறார் பிரேம்சிங் பெருமையாக.

பொருளாதார வளர்ச்சி:
• தொடர்ச்சியான வறட்சி காரணமாக பயிர் தோல்வியும்
• பயிர் தோல்வி காரணமாக தொடர் வங்கிக் கடன்,வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் போவதும்
• அதிக மகசூல் என்னும் போதைக்கு உழவர்களை அடிமைப் படுத்தி, இரசாயன உரங்களைப் பயன்படுத்திச்செய்யும் உழவிற்கு ஆதரவளித்து, பாரம்பரிய மற்றும் நிலையான விவசாய முறைகளை முடக்கும் அரசாங்கக் கொள்கைகளும்.

இன்று உழவுப்பணி பெரும் சுமையாக ஆனதற்கு முக்கிய காரணம் என்பது இந்த வெற்றி பெற்ற உழவரின் கருத்து.

“1980 வரை எங்கள் பூந்தேல்கந்த் மாவட்டத்தில் ஒரு யூரியா பை கூட வாங்கியதில்லை” என்று நினைவு கூறும் பிரேம்சிங், .இந்த நிலையை மீண்டும் நாம் அடைய,‘கூட்டுத் தற்சார்பு உழவியல்’ என்னும் மந்திரமே உதவும் என்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக தான் கவனித்ததில்பயிர்களைத் தேர்ந்தெடுக்கையில், உழவருக்கு தின வருமானம் தரும் வழி முறைகளில் அதிக கவனம் செலுத்துவது, வருமானத்தோடு கூடுதல் பயன்களையும் தரக்கூடியது.

எடுத்துக்காட்டாக, ஒரு ஏக்கரில் நெல் அல்லது கோதுமை பயிரிட்டால் சுமார் 2000கிலோ கிடைக்கிறது என்று கொள்வோம். ஒரு வருடத்தில் இதனால் கிடைக்கும் வருமானத்திற்காக, ஒவ்வொரு நான்கு மாதமும் அதிக உழைப்பு, பணியாளர்கள், பணம்,, முக்கியமாக நீர் என தொடர் செலவுகள். அதே ஒரு ஏக்கரில் நூறு கொய்யா மரக்கன்றுகளை வைத்து வளர்த்தால் ஒரு முறை நடவு; வளரும் வரை கவனம், அவ்வளவுதான்.வளர்ந்த மரங்கள் ஆண்டிற்கு 5 மடங்கு வருமானம் தரும். தின வருமானமும் கிடைக்கும்.

இயல்பான சூழ் இயல் கூறுகளின் அடிப்படையில், ஒருங்கிணைந்த பயிர் சுழற்சி முறை உழவுமுறை தொல்லை இல்லாதது ஆகும்.இது முழுக்க முழுக்க பருவத்திற்கேற்ற உழவு என்பதால், மண் வளம் கூடுவதோடு, நிலத்தடி நீரையும் அதிகப்படுத்தும்.

இன்று எனக்கு எந்தக் கடனுமில்லை. இரண்டு தலைமுறை கடன் சுமார் 25 இலட்சம் இருக்கலாம். அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டது. இது தற்சார்பு ஒருங்கிணைந்த பயிர் சுழற்சி முறை தந்த பரிசு. இம்முறை நடைமுறைப்படுத்த நீண்ட காலமாகும். ஆனால் நிலையானத; நிம்மதியானது.

மீண்ட மரியாதை
இன்று உழவுப்பணியை யாரும் விரும்புவது இல்லை.உழவருக்கு மரியாதையும் இல்லை. இப்பணிக்கு வந்தவரும் இதன் சவால்களையும் குறைந்த வருமானத்தையும் கண்டு, தினக் கூலிகளாக மாறி விட்டனர். இதுவா வளர்ச்சி நோக்கிய முன்னேற்றம்?

அனால் அனைத்து உயிர்களையும் காத்து, நலமான வளமான வாழ்வு வேண்டுவோரும், தன்மதிப்போடு வாழ விரும்புவோரும் செய்ய வேண்டியது ஒருங்கிணைந்த தற்சார்பு உழவு நுட்பம் என்பது பிரேம்சிங்கின் அசைக்க முடியா நம்பிக்கை. இதை அனைவரும் உணர வேண்டி, மரபு சார்ந்த உழவு நுட்பங்கள் விளக்கும் சுயநிதி ஊரக அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளார் இவர்.

எங்கெல்லாம் நான் செல்கிறேனோ அங்கெல்லாம் நான் பேசும் ஒரே சொல் ‘தற்சார்பு உழவு’ மட்டுமே. இது மட்டுமே ஒவ்வொரு உழவரின் தன்தேவையை நிறைவு செய்து, எவரிடத்தும் எதற்காகவும் கை ஏந்தாது, மரியாதையோடு வாழச் செய்யும் ஒரே வழிமுறை. செய்தால், மீண்டு வரும் முன்னோர் வாழ்ந்த தன்மான வாழ்க்கை முறை.- பிரேம்சிங் .

பிரேம் சிங் அவர்களின் ஆங்கில வடிவில் இருந்த கட்டுரையை தமிழ் மொழியாக்கம் செய்தவர் – சென்னை எழில்


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை