சமூகம் சார்ந்த விவசாயம் (Community Supported Agriculture)
இன்றைய விவசாய உலகில் புதியதாக ஒரு வார்த்தை காதில் விழுவது சி.எஸ்.ஏ. (CSA-COMMUNITY SUPPORTED AGRICULTURE) என்ற சமூகம் சார்ந்த விவசாயம். இதன் நோக்கம் என்னவென்றால் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஒருங்கிணைப்பது , நிலையான ஆரோக்கியமான வருமானம் மற்றும் உணவு உறுதிப்படுத்துவது அப்படியென்றால்…
விவசாயியைப் பொறுத்தவரை பொதுவாக தான் விளைவிக்கும் பொருள் யாரைச் சென்று அடையும்; அதற்கு என்ன விலை கிடைக்கும் என்று தெரிந்து ஒரு விவசாயி விவசாயம் செய்வதில்லை. அதற்கு வழியும் இல்லை.
பொத்தாம் பொதுவாக எதையோ ஒன்றை, அது அரிசியோ, கத்திரியோ அல்லது தக்காளியோ ஏதோ ஒன்றை விளைவிக்க வேண்டும். பிறகு அதை எடுத்துச் செல்ல வரும் வியாபாரியிடம் அவர் சொல்லும் விலைக்கு விற்க வேண்டும். அல்லது தூரத்து சந்தைக்கு அனுப்பி வைத்து விட்டு கமிஷன் ஏஜென்ட் விற்றுத் தரும் பணத்தை நம்பியிருக்க வேண்டும்.
அந்த வருடத்தில் தக்காளிக்கோ, சின்ன வெங்காயத்திற்கோ தட்டுப்பாடு ஏற்பட்டு அநியாயத்திற்கு விலை விற்றால், உடனே விவசாயிகள் எல்லாரும் அவற்றை அடுத்த பட்டத்தில் விதைக்கப் போட்டு, கஷ்டப்பட்டு விளைவித்து, சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது, அபரிமித விளைச்சலின் காரணமாக விலையில் பெருத்த சரிவு ஏற்பட்டு, செலவழித்த பணம் கூட திரும்ப கிடைக்காமல் தலையில் கை வைத்து நிற்கும் விவசாயிகள் நிலை ஏற்படுகிறது. இது இந்தியாவில் மிக அதிகம்.
இதற்கு காரணம் என்னவென்று சிந்தித்தால்,
ஒரு பக்கம் நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல், கிடைக்கும் நீரின் அளவு, மற்றவர் செய்யும் பயிரையே எல்லோரும் பயிர் செய்வது என்று நிறைய சொல்லலாம்;
கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை எந்த ஒரு பொருளையும் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட பரந்துபட்ட மிகப்பெரிய நாடளாவிய சந்தை ஒரு பக்கம்.
எங்கோ யாரோ விளைவித்ததை அடுத்த சில நாட்களில் வேறு ஏதோ மாநிலத்தில் இருக்கும் மக்கள் வாங்கிச் செல்வர். மிக நீண்ட தூரம் செல்ல வேண்டிய விளைபொருட்கள் இரசாயனங்களின் உதவியுடன் பதப்படுத்தப்படும்.
இடைத்தரகர்கள், வண்டி வாடகை, பதப்படுத்த வேண்டிய செலவு, குளிர்பதன கிடங்கு வாடகை என்று பொருட்களின் விலை ஏறிக்கொண்டே போகும். மீண்டும் மொத்த வணிகர்கள், சில்லறை வியாபாரிகள், அவர்கள் சந்திக்கும் செலவினங்கள், பொருட்கள் கெட்டுப்போதல், விற்காத பொருட்கள் என எல்லா செலவினங்களும் போக எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் லாபம் வைத்து விற்க வேண்டும்.
இது மிக நீண்ட வலைப்பின்னல்.
செயற்கையான சந்தையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட விளைபொருட்கள். செயற்கை ரசாயனம். செயற்கை உரம். சத்தற்ற, விஷமேறிய விளைபொருட்கள்.
ஒரு பக்கம் நஷ்டப்பட்டுக் கொண்டு நிற்கும் விவசாயி. மறுபக்கம் உடல்நலம் கெட்டு நிற்கும் மனித சமுதாயம்.
விளைவு, விவசாயிக்கு கடன் சுமை, நகர மக்களுக்கு கொடிய நோய்கள். மருந்து மாத்திரைகள்.
உணவு, உடை, உறையுள் தவிர மேற்கொண்டு மனிதன் எதைத்தேடி கொண்டு போகிறான் என்றே தெரியவில்லை. அவனை பெரும் ஆசைகளில் தள்ளி ஆடம்பரங்களை நோக்கி எல்லையில்லாமல் ஓட வைக்கும் ஒன்றுதான் உலகமயமாக்கல் என்பது. இன்று உலகமயமாக்கலின் பலனை மனிதன் அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறான்.
சந்தையின் தேவை விவசாயிக்குத் தெரியாது. நாளை என்ன பொருள் என்ன விலையில் கிடைக்கும் என்பது வாடிக்கையாளருக்குத் தெரியாது. விவசாயிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் உள்ள இந்த நீண்ட இடைவெளியை நாம் தவிர்க்க முடியாதா?
ஷி யான்…
சீனாவின் தலைநகரான பீஜிங்கிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஷேர்டு ஹார்வெஸ்ட் என்ற விவசாய பண்ணைக்கு சென்றால், அங்கு அதனை நடத்தி வரும் ‘ஷி யானை’ சந்திக்கலாம். ஷி யான் என்ற 33 வயது சீனப்பெண்மணி தனது கணவருடன் நடத்தி வரும் இயற்கை பண்ணையில் கண்ணைப்பறிக்கும் காய்கறிகள் பசுமையாக கட்சி அளிக்கும். அங்கே,
“நமது உணவு எங்கிருந்து வருகிறது?”
“நமக்கு உணவளிக்கும் விவசாயி யார்?”
என்று வரவேற்பு பலகையில் எழுதி இருக்கும்.
மேலே கண்ட இந்த கேள்விகள் மிக முக்கியமானவை. நம்மையும் நமது பொருட்களின் நுகர்வோரையும் மிக நெருங்கி வரச் செய்யும் கேள்விகள். ஏற்கெனவே நான் சொல்லியிருக்கும் பிரச்சினைகளை களையவல்ல கேள்விகள்…
அவரது கருத்தின்படி, சமூகம் சார்ந்த விவசாயம் நமது எல்லா கேள்விகளுக்கும் ஒரு விடையாக இருக்கிறது என்று ஷி யான் கூறுகிறார். அமெரிக்கா சென்று விவசாயத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர் அங்கு வெற்றிகரமாக செயல்பட்டு வந்த சமூகம் சார்ந்த விவசாயத்தை 2012 ல் சீனாவில் அறிமுகப்படுத்தினார். இதன்படி நுகர்வோர்கள் தங்கள் நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் விவசாயப்பண்ணையில் (ஒன்றுக்கும் மேற்பட்ட பண்ணைகளில் கூட) அங்கத்தினர்களாக தங்களைப்பதிவு செய்து கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி, இறைச்சி, மீன் ஆகியவற்றுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தி விடுவார்கள். தகுந்த இடைவெளியில், வேண்டிய அளவுகளில் விவசாய பொருட்கள் அவர்களுக்கு அவரவர் முகவரிகளில் பட்டுவாடா செய்யப்படும்.
இந்த முறையில் வாடிக்கையாளர்கள் தமது உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். தாம் யாரிடம் வாங்குகிறோம் என்பதையும் உணவுப்பொருட்களின் தரத்தினையும் நன்கு அறிகிறார்கள். நல்ல, தரமான, புத்தம்புதிய, சத்து மிகுந்த உணவு அவர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. அதன் மூலம் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகிறார்கள்.
சமூகம் சார்ந்த விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தங்களது பொருட்களின் நேரடி நுகர்வோரை அறிந்து அவர்களுடன் தொடர்பில் இருக்கும் வசதி கிடைக்கிறது. அவர்களது தேவைகள் அறிந்து என்னென்ன பயிர் செய்யலாம், மொத்த தேவை அளவு, எவ்வளவு காலத்தில் விளைவிக்க வேண்டும், அதற்குத் தேவையான முதலீடு எவ்வளவு ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு வேலைகளைத் துவக்க முடியும். மேலும், முக்கியமாக, தமது முதலீட்டை நுகர்வோர்களிடம் இருந்து சந்தாவாக முன்கூட்டியே பெற்றுவிடும் வசதி இருப்பது மிகப் பெரிய வரப்பிரசாதம்.
இதனால் விவசாயிகளுக்கு கடன் சுமையில் இருந்து விடுதலை கிடைக்கிறது. வேறு வேறு விவசாயிகள், வேறு வேறு பயிர் செய்பவர்கள் – உதாரணமாக அரிசி ஒருவரும், காய்கறிகள் மற்ற ஒருவரும் இறைச்சி ஒருவரும் உற்பத்தி செய்து வரும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டோ அல்லது எல்லோரும் ஒன்றிணைந்தோ சமூகம் சார்ந்த குழுவைத் தோற்றுவித்து நுகர்வோர்களிடம் தொடர்பு கொள்ள முடியும்.
நீண்ட தூரங்களுக்கு விளைபொருட்களை அனுப்ப வேண்டாம். பல நாட்களுக்கு தாங்கும் வண்ணம் விளைபொருட்களை இரசாயனத்தில் பதப்படுத்த வேண்டாம். முக்கியமாக, இடைத்தரகர்கள் தவிர்க்கப்படுவதால் நம் பொருட்களுக்கு நாமே விலை நிர்ணயம் செய்ய இயலும்.
இன்றைய விளைச்சலை இன்றே நாம் நுகர்வோரிடம் கொண்டு சென்று கொடுத்து விடலாம். நமது விளைபொருட்களை நாமே தரம் பிரித்து நுகர்வோரின் தேவைக்கிணங்க, எடையிட்டு பைகளில் போட்டு, வண்டிகளில் ஏற்றி, அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு சென்று வழங்கலாம். இத்தனையும் ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் என்பதால் நுகர்வோர் புத்தம்புதிய உணவுப்பொருட்களை பெறுவார்கள்.
கண்ணுக்குத் தெரியாமல் இங்கே ஒரு தன்னிறைவு பெற்ற சமூகம் உருவாகிவிடும்.
இன்றைய சூழலில் கோவிட்-19 என்ற கிருமி உலகளவில் பரவி உலகின் இயக்கத்தையே முடக்கி விட்ட நிலையில், நாம் இத்தகைய தன்னிறைவின் அவசியத்தை அதிகம் உணர்கிறோம். இனிமேல் குஜராத்தில் இருந்து உருளையும், நாசிக்கில் இருந்து வெங்காயமும் வரும் வாய்ப்புகள் குறைந்து போகும்போது நமது அருகில் இருக்கும் விவசாயப் பொருட்களே நமக்கு கை கொடுக்கும்.
வெறும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆடம்பரங்கள் எதுவும் நெருக்கடி காலங்களில் நமக்கு கை கொடுக்கமாட்டா. உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க வீடும் தவிர, ஏனைய அனைத்தும் நமக்கு அதிகப்படியனவைகளே என்பதை இந்த கிருமி நமக்கு மண்டையில் அடித்து சொல்லிவிட்டது. மேலும் உடல் ஆரோக்கியமே எல்லாவற்றுக்கும் பிரதானம்; அது இல்லாவிட்டால் நமக்கு வாழ்க்கையே இல்லை என்பதையும் எல்லோரும் புரிந்து கொண்டு விட்டனர்.
பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாம் மூடிக்கிடக்க, சிறு சிறு கடைகளே அருகில் இருக்கும் மக்களுக்கு உணவளிப்பவையாக மாறியுள்ளன. விவசாயிகளின் விளைபொருட்கள் அக்கம் பக்கம் இருக்கும் மக்களுக்கு பயன் கொடுக்க துவங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது பொருட்களுக்கு உள்ளூர் சந்தையை ஏற்படுத்தி கொள்வதுடன் தனது பயனாளிகளை நேரடித் தொடர்பில் வைத்திருப்பதால் கிடைக்கும் அதிகப்படியான வருமானமும், மன நிறைவும் இதற்கு முன் இருக்கவில்லை என்பதை உணர வேண்டும். ஒரே இடத்தில் அருகருகில் இருக்கும் விவசாயிகள் மக்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் முடிந்தவரை தமது நிலங்களிலேயே உற்பத்தி செய்து சமூகம் சார்ந்த விவசாய அமைப்புகளை சிறிய அளவுகளில் அருகருகே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
உதாரணமாக, ஒரு விவசாயி தனது நிலத்தில் 15 வித காய்கறிகள், அரிசி வகைகள், ஆடு, கோழி போன்றவற்றை ஒரு 300 குடும்பங்களுக்கு நிரந்தரமாக தொடர்ந்து வழங்கி வருகிறார் என்று எடுத்துக் கொண்டால், ஒரு குறிப்பிட்ட வருமானம் நிலையாக அவருக்குக் கிடைக்க ஆரம்பிக்கும்.
தொடர்ச்சியான வேலை வாய்ப்பு இருப்பதால், வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள். விவசாயம் தாண்டி, மதிப்புக்கூட்டுதல், வண்டிகளில் எடுத்துச் செல்லுதல், நுகர்வோரிடம் கொடுத்து பணம் பெறுதல் போன்ற வேலைகளுக்கு படித்த உள்ளூர் இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு பண்ணைக்கும் மற்றொரு பண்ணைக்கும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களிடம் இல்லாத விளைபொருட்களை பரிமாறிக்கொள்ளலாம். நகரங்களை நோக்கி வேலைக்குச் செல்லும் மக்கள் குறைந்து, கிராம அளவுகளில் மக்கள் சுபிட்சமாக வாழ வழி கிடைக்கும்.
ஒரு அமைப்பாக, சமூகம் சார்ந்த பண்ணையாக இருக்கும் பட்சத்தில் வங்கிகளில் கடன் உதவியும் எளிதில் கிடைக்கும். அதனைக் கொண்டு நவீன வசதிகளை அதிகப்படுத்தி, குறைந்த நிலத்தில், குறைவான நீரைக்கொண்டு, இயற்கையால் ஏற்படும் இடர்களையும் எதிர்கொண்டு, நிர்ணயம் செய்த விளைச்சலை தவறாமல் உற்பத்தி செய்ய ஒரு விவசாயியால் முடியும்.
ஷி யான் பற்றி:
பெய்ஜிங்-லிருந்து வடக்கில் 70 கிலோ மீட்டர் தூரத்தில் ஷேர்டு ஹார்வெஸ்ட் என்ற இவரது சமூகம் சார்ந்த விவசாய பண்ணை Community Supported Agriculture (CSA) இருக்கிறது. ஒரு முன்னோடியாக சீனாவில் இந்த முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஷி யான்.
2012 ல் சீனாவில் இதனை துவங்கிய ஷி யான், 2008-ல் அமெரிக்காவில் Minnesota’s Ecological Earthrise Farm-க்கு கற்பதற்காக சென்றிருந்தபோது அங்கு முதலில் சமூகம் சார்ந்த விவசாய முறையை அறிந்து கொண்டார்.
சமூகம் சார்ந்த விவசாய பண்ணைகள் இயற்கை முறையில் இரசாயன கலப்பில்லாமல், ஒருங்கிணைந்த பண்ணையமாக இருக்கின்றன. சந்தாதாரர் முறை மற்றும் நேரடி விற்பனை முறை இரண்டும் கலந்து, நுகர்வோருக்கு நேரடியாக விளைபொருட்களை விற்பதால், விவசாயிகள் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பைப் பெறுகின்றனர். இந்த முறையில் நட்டம் ஏற்பட்டால் அது எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஷி யான் விடை தேடியபோது சமூகம் சார்ந்த விவசாய பண்ணை முறையே சிறந்ததாக, நடைமுறைக்கு ஏற்றதாக அவருக்குத் தோன்றியது. அவர் இதனை ஒரு வாழ்வியல் என்று பெருமையாக குறிப்பிடுகிறார்.
இன்றைய தேதியில் அவர் 500 மிகத்திருப்தியான வாடிக்கையாளர்களை கொண்ட பண்ணையை நிர்வகித்து வருகிறார்.
பொதுவாக, பெரும்பான்மையான மக்களுக்கு தங்கள் உணவு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. ஆனால், இம்முறையில் வாடிக்கையாளர்கள் தங்களது உணவினை உற்பத்தி செய்யும் விவசாயிகளை தெரிந்து கொள்கின்றனர். விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் உறவுமுறையை முன்னிலைப் படுத்துவதாக இது உள்ளது என்று ஷி யான் கூறுகிறார்.
அவர் சி.எஸ்.ஏ -ஐ அறிமுகப்படுத்தியபோது சீனாவில் ஒரு சிலரே அதைப் பற்றி அறிந்திருந்தனர். இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட சி.எஸ்.ஏ-க்கள் சீனாவில் இயங்குகின்றன.
தனது நிலத்தில் இயற்கை முறையில் உரங்களையும், பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்தும் ஷி யான், மண் வளம் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளார். நமது உடலை மண்ணுடன் ஒப்பிடும் அவர், ஆரோக்கியமான உடல் தனது நோய்களை விரைவில் சரி செய்து கொள்வது போல, தரமான நிலமும் கிருமி மற்றும் பூச்சி தாக்குதல்களை வேகமாக சரி செய்து கொள்ளும் என்றும் மண்ணில் வளத்தை மீண்டும் சமன் செய்து கொள்ளும் என்றும் கூறுகிறார். நிலம் ஆரோக்கியமாக பேணப்பட்டால், அதில் விளையும் எதுவும் சிறந்ததாகவே இருக்கும் என்று அவர் உறுதியாக சொல்கிறார்.
கோரனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த காலத்தில் தொழில்கள் அனைத்தும் முடங்கி, மக்கள் அல்லலுற்று வருவது அனைவரும் அறிந்ததே. இன்று சீனாவில் சகஜ நிலை மெல்ல மெல்ல திரும்பிக்கொண்டு வரும்போது ஷி யானின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று பார்த்தால், அவருக்கு வழக்கத்தை விட அதிக வியாபாரம் இருப்பதாகவும், தகுந்த வேலையாட்களும், போதுமான போக்குவரத்து வசதியும் கிடைக்கவில்லை என்று சொல்கிறார். அதாவது, உலகத்தையே உலுக்கிய ஒரு பேரிடரின் தாக்கம் இவரை அதிகமாக பாதிக்கவில்லை.
இதுவே சி.எஸ்.ஏ-வின் வெற்றிக்கு உதாரணம். நமது விவசாய நண்பர்களும் இந்த முறையில் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காண வேண்டுகிறோம்.
நன்மைகள்:
- இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
- விவசாய நிலங்கள் அழிவடையாமல், வீடுகளாக, நிறுவனங்களாக மாற்றப்படாமல் காப்பாற்றப்படுகின்றன.
- சிறு விவசாயிகளின் அமைப்புகள் பொருளாதரத்தில் ஸ்திரமாக நிலைக்க முடிகிறது.
- நீண்ட தொலைவு செல்ல வேண்டிய தேவை, அதற்கு உண்டான பதப்படுத்துதல், பெட்டிகளில் இட்டு கட்டுதல் மற்றும் வாகன போக்குவரத்து ஆகியவை தவிர்க்கபடுகின்றன.
- எல்லா தரப்பு மக்களுக்கும் உணவு கிடைக்க வழி ஏற்படுகிறது.
- சமூகத்திலும், அரசியலிலும் மாற்றங்களுக்கு வித்திடுகிறது.
- விவசாயிகளும், பொது மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிகிறது.
- குடும்ப சூழ்நிலை மேம்படுகிறது. குடும்பத்திலேயே தயாரான உணவுகள் ஆரோக்கியத்தை அதிகரித்து, வெளியில் உண்ணும் செலவுகளைக் குறைத்து, பணம் மிச்சப்படுத்த உதவுகிறது.
- எந்த காலத்தில் என்ன மாதிரியான உணவுகள் கிடைக்கும் என்பதை அறிந்து, அவற்றுக்குத் தேவையும் அதிகரிக்கிறது.
- சிறு குழந்தைகளும் உண்மையான உணவின் அருமை, வகைகள், அவற்றின் விளையுமிடம் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர்.
- அருகில் கிடைப்பதாலும், தரமாக, புதியவையாக இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கி பயனடைகின்றனர்.
- அன்று பறித்த பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் கூடுகிறது.
- மனங்கள் நிறைவடைந்து, மகிழ்ச்சி பெருகுவதால், நீடித்த நோய்கள் குறைகின்றன.
- சமூக, சுற்றுச்சூழல் ஆகியன மேம்படுகின்றன.
மருந்தில்லாத, இயற்கை விவசாயத்தின் பயன்கள்:
சாதரணமாக, மக்கள் இப்போது இயற்க்கை விவசாயத்தின் அருமையை புரிந்து கொண்டுள்ளனர். இரசாயன கலப்பற்ற, இயற்க்கை முறையில் விளைந்த காய்கறி, பழங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் காணப்படுகிறது. எல்லோரும் வாங்கும் சூழலும், ஏற்கத்தக்க விலை நிர்ணயமும் சமூகம் சார்ந்த விவசாயத்தில் சாத்தியப்படுகிறது என்பதால், உணவுத்துறையில் இன்றைய நிலையில் நாம் ஒரு புரட்சியை சாதிக்கும் நிலையில் இருக்கிறோம்.
கொரோனா காய்ச்சலில் உலகமே ஸ்தம்பித்து போனாலும், பல துறைகள் உலகம் முழுக்க முடங்கிப் போனாலும் உணவுத் துறையும் விவசாயமும் அதிகம் பாதிக்கப்படவில்லை. பெரிய, பெரிய மால்கள் மூடப்பட்டு விட்டன. மக்கள் புதிய படிப்பினையை தெரிந்து கொண்டனர். சிறு, குறு வியாபார அமைப்புகளே, தமது சமூகத்தில் உடனடியாக, நேரடித் தொடர்பில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்பதை காலம் உணர்த்தி விட்டது. மேலும், அருகருகே வேலை வாய்ப்புகள் இருப்பதால், எல்லோருக்கும் வேலை கிடைப்பதுடன், நகரங்களை நோக்கி மக்கள் நகர்வது குறைகிறது. விலை நிலங்கள் கட்டிடங்களாக மாறுவது குறைகிறது. ஓரிடத்தில் இருக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் சமூகம் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. நாமறியாமல், அங்கே ஒருவித தன்னிறைவு ஏற்படுகிறது.
நிறைவாக, இயற்கை வேளாண்மை உத்வேகம் பெறுகிறது. மக்கள் உடல் நலம், மன நலம் பெறுகிறார்கள். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மருத்துவம் சார்ந்த செலவினம் குறைகிறது.
இன்றைய கெடுதியான காலத்திலும், இன்றைய சூழ்நிலையை இயற்கை நமக்களித்த ஒரு புதிய வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நம் விவசாய நண்பர்கள் இந்த சமூகம் சார்ந்த விவசாய முறையை கைகொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
தமிழ் மொழியாக்கம் – நாகராஜ், சென்னை
நன்றி: ஷி யான் சம்பந்தமான இணையதள பக்கங்கள்.
Comments
Post a Comment